மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் வாய்ப்பு? -கேரி கிரிஸ்டன் சொன்ன பதில் !
இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற போது அணியின் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டன் இருந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது உள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரதோர் மற்றும் ஃபில்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இவர்களுடைய பதவிக்காலம் வரும் டி20 உலகக் கோப்பையுடன் நிறைவடைய உள்ளது. இவர்கள் அனைவரும் 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இதனால் தற்போது இந்திய பயிற்சியாளர் பதவிக்கு அடுத்த மாதம் முதல் விண்ணப்பத்தை பெற பிசிசிஐ தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் ஏற்கெனவே இந்திய கிரிக்கெட் அணிக்கு 50 ஓவர் உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் மீண்டும் அணிக்கு பயிற்சியாளராக வரலாம் என்று சில செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ள கேரி கிரிஸ்டன் இது குறித்து பேசியுள்ளார். அதில், "என்னை பொருத்தவரை மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வரும் எண்ணம் இல்லை. நான் தற்போது 'CoachED' என்ற நிறுவனத்தின் மூலம் பல இளம் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன். ஏனென்றால், ஒரு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளருக்கு தான் எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்று தெரியும். ஆகவே எனக்கு தெரிந்தவற்றை சில இளம் பயிற்சியாளர்களுக்கு கற்று கொடுத்து வருகிறேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே அதை தற்போது விட்டு வர எனக்கு எந்தவித எண்ணமும் இல்லை.
மேலும் தற்போது உள்ள இந்திய அணியில் நிறையே மேட்ச் வின்னர்கள் உள்ளனர். அவர்களை கோலி சரியாக வழிநடத்தி வருகிறார். ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் அவர் நிறையே கற்று கொண்டு வருகிறார். இந்திய கிரிக்கெட் அணி தங்கள் நாட்டில் உள்ள வீரர்களின் திறமையை நன்றாக பயன்படுத்தி வருகிறது" எனக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கேரி கிரிஸ்டன் 2007 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
இவருடைய பயிற்சி காலத்தில் இந்திய கிரிக்கெட் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அத்துடன் இவருடைய பயிற்சி காலத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையாக முதலிடம் பிடித்தது. இவை தவிர கேரி கிரிஸ்டன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் ஐபிஎல் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். மேலும் டெல்லி ஐபிஎல் அணிக்கும் அவர் ஒரு முறை பயிற்சியாளராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பயிற்சியாளராக அவர் மீண்டும் வருவார் என்ற வதந்திக்கு தன்னுடைய பதில் மூலம் கேரி கிரிஸ்டன் தெளிவு படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: ஐபிஎல் 2021 முதல் பாதி ரீகேப்... டாப் நான்கில் இடம் பிடிக்கப்போவது எந்த அணிகள்?