(Source: ECI/ABP News/ABP Majha)
Sachin | சச்சினோடு நடந்த சம்பவம்.. இந்தியா வரமுடியாதுன்னு பயந்தேன்- மனம்திறந்த சோயப் அக்தர்
கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2007-ஆம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு யூடியூப் செனல் மற்றும் வர்ணனை ஆகியவற்றில் இறங்கி கலக்கி வருகிறார். இவருக்கு இந்தியாவில் எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் இவருடைய கருத்துகள் எப்போதும் இந்தியாவில் பேசு பொருளாவது வழக்கம். அந்தவகையில் சமீபத்தில் ஒரு விளையாட்டு தளம் ஒன்று நடத்திய கலந்துரையாடலில் சோயிப் அக்தர் 2007ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் தொடர் குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பேசியுள்ளார்.
அதில், "2007ஆம் ஆண்டு தொடருக்கு பிறகு ஒரு விருது வழங்கம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அங்கு எனக்கும் சச்சினுக்கும் இடையே ஒரு சம்பவம் நடந்தது. அதாவது நான் விளையாட்டாக சச்சின் டெண்டுல்கரை தூக்கினேன். ஆனால் என்னுடைய கை தவறி அவர் கீழே விழுந்தார். அவருக்கு அடியும் படவில்லை. அந்த சமயத்தில் ஒரு நிமிடம் நான் மிகவும் பயந்துவிட்டேன். இனிமேல் இந்தியாவிற்கு என்னால் வரமுடியாது. இந்தியர்கள் என்னை உயிருடன் எரித்து கொன்றுவிடுவார்கள் என்று எல்லாம் எனக்கு எண்ணம் வந்தது. ஏனென்றால் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் கிரிக்கெட் கடவுள். அவருக்கு என்னால் எந்தவித ஆபத்து மற்றும் காயம் ஏற்பட்டு விட கூடாது என்று பயந்தேன்.
களத்திலும் வெளியிலும் நானும் சச்சின் டெண்டுல்கரும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் பல முறை இது போன்ற சிரித்து பேசி மகிழ்ந்துள்ளோம். பாகிஸ்தானிற்கு பிறகு எனக்கு அதிக அன்பு கொடுத்த நாடு என்றால் அது இந்தியா தான். அதை நான் எப்போதும் மறக்கமாட்டேன். இங்கு எப்போது கிரிக்கெட் ஆட வந்தாலும் எனக்கு நல்ல நினைவுகள் தான் கிடைத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஐசிசி போட்டிகள் தவிர வேறு எந்த கிரிக்கெட் தொடரும் சமீபத்தில் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடைசியாக 2007-ஆம் ஆண்டு இந்தியா சுற்றுப் பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றது. அதன்பின்னர் மும்பை பயங்கரவாத தாக்குதல் 2008ல் நடைபெற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் இரு நாடுகளும் ஐசிசி தொடர்களில் மட்டும் பங்கேற்று வருகின்றனர். வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: முதல் டெஸ்டில் 9 விக்கெட்... தரவரிசையில் 10 இடங்கள் முன்னேற்றம்- அசத்திய பும்ரா..!