FIFA World Cup 2026: 48 அணிகள் பங்கேற்கும் ஃபிபா கால்பந்து உலக்கோப்பை போட்டி - எங்கு, எப்போது தெரிஞ்சிக்கோங்க!
FIFA World Cup 2026: ஃபிபா கால்பந்து 2026 உலக்கோப்பை போட்டி ஜுன் 11ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA World Cup 2026: ஃபிபா கால்பந்து 2026 உலக்கோப்பை போட்டியில், 48 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
FIFA World Cup 2026 Schedule:
கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்று அசத்தியது. இந்நிலையில், அடுத்த கால்பந்து உலகக் கோப்பைக்கான போட்டி விவரங்களை, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி,ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2026 போட்டியானது, ஜுன் 11ம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்த உள்ளன. கடந்த உலகக் கோப்பையில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில், அடுத்த உலகக் கோப்பையில் 48 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியின் முதல் ஆட்டம், மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 16 நகரங்களில் 104 போட்டிகள் நடைபெற உள்ளன.
போட்டி விவரங்கள்:
கால்பந்து உலகக் கோப்பை 2026-ன் இறுதிப்போட்டி ஜுலை 19ம் தேதி, அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் கிழக்கு ருதர்ஃபோர்டில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டா மற்றும் டெல்லாஸ் பகுதிகளில் அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. மூன்றாவது இடத்திற்கான போட்டி மியாமியில் நடைபெற உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், கன்சாஸ் சிட்டி, மியாமி மற்றும் பாஸ்டன் ஆகியவை உலகக் கோப்பையின் காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளன.
3 நாடுகளில் நடைபெறும் போட்டிகள்:
மொத்தத்தில் 13 போட்டிகள் கனடாவில் நடைபெறும். இதில் 10 முதல் சுற்று போட்டிகள் அடங்கும். ரொறன்ரோ மற்றும் வான்கூவர் நகரங்களில் தலா 5 போட்டிகள் நடைபெற உள்ளது. மெக்சிகோவிலும் முதல் சுற்று போட்டிகள் 10 உட்பட மொத்தம் 13 போட்டிகள் நடைபெற உள்ளன. குவாடலஜாரா மற்றும் மான்டேரியில் தலா 5 முதல் சுற்று போட்டிகள் நடைபெறும். மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ள 11 நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டொராண்டோ, மெக்ஸிகோ சிட்டி மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களில், அந்தந்த தேசிய அணிகளின் தொடக்க ஆட்டங்கள் நடைபெற உள்ளது. விளையாட்டுகளுக்கான கிக்ஆஃப் நேரத்தை FIFA இன்னும் அறிவிக்கவில்லை. இந்த உலகக் கோப்பையின் மூலம், மெக்சிகோ மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை நடத்தும் முதல் நாடு என்ற பெருமையை பெறுகிறது.
போட்டிக்கான இதர விவரங்கள்:
இறுதிப்போட்டி நடைபெற உள்ள மெட்லைஃப் மைதானம் கடந்த 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதில், 82,500 பேர் அமர்ந்து போட்டியை ரசிப்பதற்கான வசதி உள்ளது. 2016 இல் கோபா அமெரிக்கா சென்டெனாரியோ இறுதிப் போட்டி இந்த மைதானத்தில் நடைபெற்றது. அதில், பெனால்டி ஷூட்அவுட்டில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை சிலி அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.