TamilNadu Women Football Team: தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு ரூபாய் 60 லட்சம் ஊக்கத்தொகை..காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சர் கோப்பை நிறைவு விழாவில் தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் ரூபாய் 60 லட்சத்தை ஊக்கதொகையாக வழங்கியுள்ளார்.
’களம் நமதே’ முதலமைச்சர் கோப்பை - 2023 நிறைவு விழாவில் தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் தங்கக் கோப்பை வென்ற தமிழ்நாடு அணி வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரூபாய் 60 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்று வந்த சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டி 28.6.2023 அன்று நடபெற்றது அப்போட்டியில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னதாக தமிழ்நாடு மகளிர் அணி இக்கோப்பையை 2017-2018 ஆம் ஆண்டு வென்றிருந்தது. 5 ஆண்டுகள் கழித்து இப்படத்தை வென்றதை அடுத்து தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தது.
அதைத் தொடர்ந்து ஜூலை 3 ஆம் தேதி தமிழ்நாடு கால்பந்து அணியின் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்று (25.07.2023) வரை நடைபெற்று வந்த முதலமைச்சர் கோப்பை நிறைவு விழா இன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்- 2023 போட்டியில் முதலிடம் பெற்று தங்க கோப்பை வென்ற தமிழ்நாடு அணியை பாராட்டும் விதமாக ரூபாய் 60 லட்சத்தை ஊக்கத்தொகையாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சரிடம் இருந்து காசோலையை அணியின் கேப்டன் தேவி மற்றும் அணியின் தலைமை பயிற்றுனர் கோகிலா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் அணியின் வீராங்கனைகள், பயிற்றுனர் கோகிலா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.