Dale Steyn Retirement: ஓய்வுபெற்றது தென்னாப்பிரிக்க புயல் ..! கிரிக்கெட்டில் இருந்து டேல் ஸ்டெயின் ஓய்வு..!
Dale Steyn Retirement: சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின்(Dale Steyn ). 38 வயதான டேல் ஸ்டெயின் தென்னாப்பிரிக்கா அணி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக வலம் வந்தவர். இந்த நிலையில், 38 வயதான டேல் ஸ்டெயின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
Announcement. pic.twitter.com/ZvOoeFkp8w
— Dale Steyn (@DaleSteyn62) August 31, 2021
இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த வருடத்தை விட இந்த வருடம் சிறப்பாக இருந்திருக்கலாம். என்னால் அனைத்து தருணங்களையும் நினைகூர முடியவில்லை. 20 வருட பயிற்சி, ஆட்டங்கள், பயணங்கள், வெற்றிகள், தோல்விகள், கட்டப்பட்ட கால்கள், களைப்பு, மகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவம். சொல்வதற்கு ஏராளமான நினைவுகள் உள்ளது. மிக அதிகமான நபர்களுக்கு நன்றிகள். இன்று அதிகாரப்பூர்வமாக நான் அதிகமாக நேசித்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கசப்பான இனிப்பு. ஆனால் நன்றி.
குடும்பத்தில் இருந்து அணிவீரர்கள், பத்திரிகையாளர்கள் முதல் ரசிகர்கள் வரை ஒவ்வொருவருக்கும் நன்றி. இது ஒரு மறக்கமுடியாத பயணம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டேல் ஸ்டெயின் சர்வதே கிரிக்கெட் போட்டியில் கடந்த 2004ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம் அறிமுகமானார். அதேபோல, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2005ம் ஆண்டு ஆசிய லெவன் அணிக்கு எதிராக அறிமுகமானார். 2007ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அறிமுகமானார்.
சுமார் 16 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் டேல் ஸ்டெயின் 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 125 ஒருநாள் போட்டிகளில் ஆடி 196 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 47 டி20 போட்டிகளில் ஆடி 64 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், 95 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 97 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
டேல் ஸ்டெயின் கடைசியாக 2019ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தார். அதேபோல, தனது கடைசி ஒருநாள் போட்டியையும் இலங்கை அணிக்கு எதிராக 2019ம் ஆண்டு வென்றிருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்தாண்டு தனது இறுதி டி20 போட்டியில் ஆடியிருந்தார்.
ஸ்டெயின் ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக ஒரே போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.தென்னாப்பிரிக்கா நாட்டு கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமைக்கும் டேல் ஸ்டெயின் சொந்தக்காரர் ஆவார்.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்படும் டேல் ஸ்டெயின் பேட்டிங்கிலும் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 60 ரன்களை ஒரே போட்டியில் எடுத்து அணிக்கு உதவியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 1251 ரன்களை குவித்துள்ள டேல் ஸ்டெயின் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 76 ரன்களை குவித்துள்ளார்.
அவரது ஓய்வு நிச்சயம் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்றுள்ள டேல் ஸ்டெயினுக்கு பல நாட்டு வீரர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.