Indian cricket in 2021| இங்கி. டெஸ்ட் தொடர் வெற்றி To கேப்டன்சி சர்ச்சை: 2021 இந்திய கிரிக்கெட் அணி டாப் 10 சம்பவங்கள் !
2021ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் நடந்த சிறப்பான சமப்வங்கள் என்னென்ன?
2021-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. எப்போதும் வருட கடைசி வந்தால் அந்த ஆண்டு நடைபெற்ற சில முக்கியமான சம்பவங்களை நாம் திரும்பி பார்ப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு தற்போது வரை இந்திய கிரிக்கெட்டில் நடைபெற்ற சில சம்பவங்களை திரும்பி பார்ப்போம்.
- இங்கிலாந்தை பந்தாடிய இந்திய அணி :
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி-இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றது. அந்தத் தொடரில் அக்சர் பட்டேல் சிறப்பாக பந்துவீசினார். இந்தத் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
- சூர்யகுமாரின் முதல் பந்து சிக்சர்:
டெஸ்ட் தொடரை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டி20 தொடரில் விளையாடியது. அப்போது இந்திய அணியில் அறிமுக வீரராக சூர்ய குமார் யாதவ் களமிறங்கினார். தன்னுடைய முதல் அறிமுக வீரராக தான் சந்தித்த முதல் பந்தில் சூர்யகுமார் யாதவ் சிக்சர் அடித்து அசத்தினார்.
- கொரோனா பாதிப்பால் பாதியில் நின்ற ஐபிஎல்:
2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் தொடங்கியது. எனினும் மே மாதத்தின் தொடக்கத்தில் முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்த இந்திய அணி:
ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட பிறகு இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய-நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கையில் ஜேமிசன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
- 78 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடருக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. அந்தத் தொடரில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு சுருண்டு ஏமாற்றமளித்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதைபோல் இந்த டெஸ்டில் இந்திய அணி மிகவும் மோசமான ஸ்கோரை பதிவு செய்தது.
- நான்காவது கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்:
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பின்பு பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் யுஏஇயில் நடைபெற்றது. அதில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தோற்கடித்தது. மேலும் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.
- டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 10 உடன் வெளியேறிய இந்தியா:
ஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை தொடர் யுஏஇயில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானிடம் படு தோல்வி அடைந்தது. அத்துடன் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியிடமும் தோல்வி அடைந்தது. இதன்காரணமாக சூப்பர் 10 சுற்றுடன் இந்திய அணி உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறி ஏமாற்றமளித்தது.
- வெங்கடேஷ் ஐயரின் இந்திய அறிமுகம்:
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் ஐயர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் யுஏஇயில் நடைபெற்ற 7 போட்டிகளிலும் இவர் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அதைவைத்து இந்திய அணியில் இடம்பிடித்தார்.
- ருதுராஜ் கெய்க்வாட்டின் ருத்ர தாண்டவம்:
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சென்னை அணி வெல்ல முக்கியமான காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்தார். அதன்பின்னர் சையத் முஸ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் நான்கு சதங்கள் அடித்து அசத்தி வருகிறார். தற்போது தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பை அதிகமாக்கியுள்ளார்.
- விராட் கோலியின் விலகலும், சர்ச்சையும்:
டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். அதன்பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். எனினும் தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன்பாக இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளர் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நிக்கப்ப்பட்டார். இந்த அதிரடி நீக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் இடம் கேப்டன் பதவியிலிருந்து விலக கூடாது என்று கூறியதாக தெரிவித்திருந்தார். ஆனால் விராட் கோலி அப்படி யாரும் என்னிடம் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனால் இந்த சம்பவம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இங்கிலாந்து வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணியின் பயணம் இந்தாண்டு விராட் கோலி கேப்டன் பதவி சர்ச்சையுடன் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கோட் சூட்.. பளபள ப்ளேஸர்.. தோனியும், சாக்ஷி தோனியும் கலக்கும் ஈவண்ட்..