பிராட்மேன் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்! இவர்தான் முதல் இந்தியர் - அப்படி என்ன சாதனை?
இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் புது வரலாறு படைத்து பிராட்மேன் வரிசையில் இணைந்துள்ளார்.
இந்தியா – வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது 308 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
புது வரலாறு:
இந்த டெஸ்ட் போட்டி மூலமாக இந்திய அணியின் வளரும் நட்சத்திரமும், இளம் வீரருமான ஜெய்ஸ்வால் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 56 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் மொத்தம் 66 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் 10 டெஸ்ட் போட்டிகளுக்குள் 1000 ரன்களை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஜெய்ஸ்வால் மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 2 இரட்டை சதங்கள் மற்றும் 5 அரைசதங்களுடன் மொத்தம் 1094 ரன்கள் எடுத்துள்ளார்.
பிராட்மேன் வரிசையில் ஜெய்ஸ்வால்:
இதற்கு முன்பு இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகளுக்குள் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சுனில் கவாஸ்கர் வசம் இருந்தது. அவர் 10 டெஸ்ட் போட்டிகளுக்குள் 978 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
10 டெஸ்ட் போட்டிகளுக்குள் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் மற்றும் கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான் பிராட்மேன் தன்வசம் வைத்துள்ளார். அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் 1446 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் எவெர்டன் வீகிஸ், 1125 ரன்களுடனும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹேட்லீ 1102 ரன்களுடன் உள்ளனர். தற்போது 4வது இடத்தில் ஜெய்ஸ்வால் 1094 ரன்களுடன் உள்ளார்.
இந்திய அணியின் வளர்ந்து வரும் நட்சத்திரமான ஜெய்ஸ்வால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்கிறார். தனது அபார திறமையால் இந்திய ஏ அணி, ஐ.பி.எல். தொடரில் அசத்தியவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிட்டியது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் தற்போது தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் அஸ்வினின் அபார சதத்தின் உதவியுடன் 376 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, முதல் இன்னிங்சைத் தொடங்கிய வங்கதேச அணி பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் வேகத்தில் 149 ரன்களுக்கு சரிந்தது. இதையடுத்து, தற்போது இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் ஆடி வருகிறது. தற்போதே 300 ரன்களுக்கு மேல் முன்னிலையில் உள்ள இந்திய அணிக்கு இன்று 3வது நாள் ஆட்டம் என்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.