WPL Auction 2023: மகளிர் ஐபிஎல் ஏலம்...எந்தெந்த அடிப்படை ஏலத்தொகையில் எத்தனை பேர்.. அதிகபட்ச தொகை எவ்வளவு?
மகளிருக்கான ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளின் பட்டியலை, இந்திய கிரிக்கெட் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
மகளிர் ஐபிஎல்:
மகளிருக்கான பிரீமியர் லீக் முதல்முறையாக நடப்பாண்டில் நடைபெற உள்ளது. 5 அணிகள் பங்கேற்க உள்ள தொடர் வரும் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 22 போட்டிகள் நடைபெறும் எனவும், பர்போர்ன் மற்றும் டி.ஓய். பட்டேல் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏல விவரம்:
அதைமுன்னிட்டு, 5 அணிகளுக்காக விளையாட உள்ள வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் 13ம் தேதியன்று பிற்பகல் 2.30 மணியளவில் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,525 பேர் முன்பதிவு செய்த நிலையில், இறுதியாக 409 பேரின் பெயர்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளது. அதில், 246 பேர் இந்தியர்கள், 163 பேர் வெளிநாட்டு வீராங்கனைகள் ஆவர். இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள் 202 பேர், சர்வதேச போட்டிகளில் விளையாடதவர்கள் 199 என்பது குறிப்பிடத்தக்கது. 8 பேர் அசோசியேட் நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். அதில், ஒரு அணிக்கு 18 பேர் என மொத்தமே 90 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர். அவர்களில் 60 பேர் இந்திய வீராங்கனைகள். மீதமுள்ள 30 இடங்கள் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஏலத்தொகை:
தங்களுக்கு வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்க ஒரு அணிக்கு மொத்தமாக 12 கோடி ரூபாய் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விலையாக ரூ.50 லட்சம், ரூ.40 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் மற்றும் ரூ.20 லட்சம் அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 லட்சம் பட்டியல்:
வீராங்கனைக்ளுக்கான அதிகபட்ச அடிப்படை ஏலத்தொகையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவில் மொத்தம் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், பூஜா வஸ்த்ரகர், ரிச்சா கோஷ், ஸ்னே ராணா, மேக்னா சிங் மற்றும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பை வென்ற கேப்டன் ஷஃபாலி வர்மா என 10 பேர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, ஆஷ்லே கார்ட்னர், நாட் ஸ்க்ரைவர் ப்ரன்ட், மேக் லேன்னிங், டேன்னி வியாட், அலிசா ஹீலி, ஜெஸ் ஜான்சென், கேதிரினா ஸ்கைவர் ப்ரன்ட், சினோலா ஜாப்தா,லோரின் ஃபிரி,டேரிஸ் பிரவுன், எல்லிஸ் பெர்ரி, சோஃபி எக்லெஸ்டோன், சோஃபி டிவைன் & டீன்ட்ரா டோட்டின் ஆகிய 14 வீராங்கனைகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மற்ற அடிப்படை ஏலத்தொகை:
இதற்கடுத்தபடியாக, அடிப்படி ஏலத்தொகையான 40 லட்ச ரூபாய் பட்டியலில் 30 வீராங்கனைகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் எனும் அடிப்படை ஏலத்தொகை பிரிவுகளிலும் வீராங்கனைகள் ஏலத்தில் விடப்பட உள்ளனர். அண்மையில் தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று இருந்த, அனைத்து வீராங்கனைகளின் பெயர்களும் இந்த இறுதி ஏலப்பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.