(Source: ECI/ABP News/ABP Majha)
World Test Championship 2023-25: இங்கிலாந்துக்கு எதிராக அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் முந்தி சென்ற இந்திய அணி..!
55 சதவீத புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் வரலாற்றில் ரன் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும். முன்னதாக, கடந்த 2021ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணியை 372 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி 7 போட்டிகளில் 50 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும், இந்திய அணியின் புள்ளிகள் சதவீதம் 59.52ஐ எட்டியுள்ளது. இதையடுத்து, 55 சதவீத புள்ளிகளுடன் இருந்த ஆஸ்திரேலிய அணியை பின்னுக்கு தள்ளி தற்போது புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நியூசிலாந்து முதலிடம்:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. நியூசிலாந்து அணியின் புள்ளிகள் சதவீதம் 75.00. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, ஒன்றில் தோல்வியடைந்துள்ளது. ஆஸ்திரேலியா 2023-25 சீசனில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஆறில் வெற்றி பெற்று, மூன்றில் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும், ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. அதேபோல், இந்திய அணி 7 டெஸ்டில் விளையாடி நான்கில் வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டெஸ்ட் டிராவுடன் 2வது இடத்தில் உள்ளது இந்திய அணி.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 புள்ளிகள் அட்டவணை
தரவரிசை | அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | டிரா | புள்ளிகள் | புள்ளிகள் சதவீதம் |
---|---|---|---|---|---|---|---|
1 | நியூசிலாந்து | 4 | 3 | 1 | 0 | 36 | 75.00 |
2 | இந்தியா | 7 | 4 | 2 | 1 | 50 | 59.52 |
3 | ஆஸ்திரேலியா | 10 | 6 | 3 | 1 | 66 | 55.00 |
4 | வங்கதேசம் | 2 | 1 | 1 | 0 | 12 | 50.00 |
5 | பாகிஸ்தான் | 5 | 2 | 3 | 0 | 22 | 36.66 |
6 | வெஸ்ட் இண்டீஸ் | 4 | 1 | 2 | 1 | 16 | 33.33 |
7 | இங்கிலாந்து | 7 | 3 | 3 | 1 | 21 | 25.00 |
8 | தென்னாப்பிரிக்கா | 4 | 1 | 3 | 0 | 12 | 25.00 |
9 | இலங்கை | 2 | 0 | 2 | 0 | 0 | 0.00 |
போட்டியில் என்ன நடந்தது..?
ராஜ்கோட்டில் நடந்த இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. அதேநேரம் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 4 விக்கெட்டுக்கு 430 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பதிலுக்கு பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 122 ரன்களுக்குள் சுருண்டது. மார்க் வுட்டைத் தவிர, இங்கிலாந்தின் எந்த பேட்ஸ்மேனும் 20 ரன்களைத் தொட முடியவில்லை. அதிகபட்சமாக மார்க் வுட் 15 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதே சமயம் இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பும்ரா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தற்போது, ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரின் நான்காவது போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது.