World Cup 2023: இந்திய பேட்டிங் வரிசையில் நம்பிக்கை தரும் இரண்டு அறிமுகங்கள்.. உலகக்கோப்பை அழுத்தத்தை சமாளிப்பார்களா?
World Cup 2023: இந்த இரண்டு வீரர்களுக்கும் இந்த உலகக்கோப்பைத் தொடர்தான் அறிமுகத் தொடர் என்பதால் இருவர் மீதும் எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எகிறியுள்ளது.
ODI World Cup 2023: உலகக்கோப்பைத் தொடர் நாளை முதல் வெகு விமர்சையாக தொடங்கவுள்ளது. இந்த தொடர் குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த நியூசிலாந்து அணியும் மோதவுள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடர் பல வீரர்களுக்கு முதல் உலகக்கோப்பைத் தொடராக அமைந்துள்ளது. அதிலும் இலங்கை அணியைச் சேர்ந்த 9 வீரர்களுக்கு இந்த உலகக்கோப்பை அறிமுக உலகக்கோப்பைத் தொடராகும். இந்நிலையில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இரண்டு வீரர்கள் குறித்து இங்கு காணலாம். குறிப்பாக உலகக்கோப்பைத் தொடர் என்றாலே தனி அழுத்தம் தொடரில் இணைந்து கொள்ளும்.
சுப்மன் கில்
இந்தியாவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன் சுப்மான் கில் , வெறும் 24 வயதில், இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு முக்கிய அங்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது மட்டும் இல்லாமல் நம்பிக்கைகுரிய வீரராகத் திகழ்கிறார். 2018 ஆம் ஆண்டு இந்தியாவின் U-19 உலகக் கோப்பை வெற்றியில் அவர் முக்கியப் பங்கு வகித்தபோது உலகக் கோப்பை வெற்றியாளராக பார்க்கப்பட்டார் சுப்மன். அதன் பின்னர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை வென்றார். அவர் ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் 890 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரர்களில் சுப்மன் கில்லும் இடம் பெற்றுள்ளார்.
சூர்யகுமார் யாதவ்
இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையில் பெரும் நம்பப்படும் வீரராக உள்ள சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில்தான் உலகக்கோப்பைத் தொடரில் அறிமுகமாகிறார். இந்திய அணியில் அவர் அறிமுகமான வயதில் சில வீரர்கள் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வை அறிவிக்க யோசனை செய்திருக்க அதிக வாய்ப்புகள் உண்டு. அதாவது, ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தனது 31வது வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் சூர்யா. டி20 போட்டியில் மிரட்டலாக விளையாடும் சூர்யா ஒருநாள் தொடரில் எப்படி விளையாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒருநாள் போட்டியில் சூர்யாவின் வேகம் கைகொடுக்குமா என்றால் அது இன்று வரை 50-50 ஆகத்தான் உள்ளது. கடைசி 10 ஓவர்களில் இவர் களமிறங்கினால் போட்டியை முற்றிலும் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றி விடுவார்.
இந்த இரண்டு வீரர்களுக்கும் இந்த உலகக்கோப்பைத் தொடர்தான் அறிமுகத் தொடர் என்பதால் இருவர் மீதும் எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் எகிறியுள்ளது. இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு இந்த தொடர் அறிமுக உலகக்கோப்பத் தொடர் என்றாலும் இஷான் கிஷனுக்கு தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அப்படி இருக்கும்போது கில் மற்றும் சூர்யா மீது எகிறியுள்ளது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி
ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஷ்வின், இஷான் கிஷன் கிஷன். , சூர்யகுமார் யாதவ்.