Womens T20 Asia Cup 2022: வரலாறு படைத்த தாய்லாந்து அணி..! கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி...! ஆசியகோப்பையில் அசத்தல்..
மகளிர் ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியை முதன்முறையாக தாய்லாந்து அணி வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது.
மகளிர் ஆசிய கோப்பைத் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சில்ஹெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற 10வது டி20 போட்டியில் பலமிகுந்த பாகிஸ்தான் அணியும், தாய்லாந்து அணியும் நேருக்கு நேர் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு முனீபா அலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மரூப் 3 ரன்களில் அவுட்டானார். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தொடக்க வீராங்கனை அமீன் மட்டும் களத்தில் நிலைத்து நின்றார், ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மற்றொரு புறம் அமீன் பொறுப்புடன் ஆடினார். தாய்லாந்து வீராங்கனைகளும் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர்.
சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அமீன் 64 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தாய்லாந்து வீராங்கனை டிபோச் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தாய்லாந்து அணியின் தொடக்க வீராங்கனை நன்னபத் 13 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சனிடா சுத்திருவாங் டக் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் நாருமோல் சாய்வாய் தொடக்க வீராங்கனை சாந்தமுடன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்த நின்று ஆடியது.
Bowing down 🙇♂️ to the ground as a mark of respect 🇹🇭 @ThailandCricket #AsiaCup2022 #AsiaCupT20 #WomensAsiaCup #CricketTwitter pic.twitter.com/VfWWJkhhLa
— Cricstagram (@Cricstagram) October 6, 2022
அணியின் ஸ்கோர் 82 ரன்களை எட்டியபோது கேப்டன் சாய்வாய் 17 ரன்களில் அவுட்டானார். அடுத்த வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும், சிறப்பாக ஆடிய சாந்தம் அரைசதம் விளாசினார். அவரது அபார பேட்டிங்கால் தாய்லாந்து ஸ்கோரும் உயர்ந்தது. சிறப்பாக ஆடிய சாந்தம் அணியின் ஸ்கோர் 105 ரன்களை எட்டியபோது 51 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால், கடைசி ஓவரில் விறுவிறுப்பு ஏற்பட்டது. ஆனாலும், களத்தில் இருந்த ரோஸ்னன் கானோ பவுண்டரி விளாசியதால் தாய்லாந்து அணி 1 பந்து மீதம் வைத்து 19.5 ஓவர்களில் 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பலமிகுந்த பாகிஸ்தான் அணியை தாய்லாந்து அணி டி20 போட்டியில் வீழ்த்துவது இதுவே முதன்முறை ஆகும். பாகிஸ்தானை வீழ்த்திய தாய்லாந்து அணிக்கு பல்வேறு நாட்டு வீரர்கள், வீராங்கனைகளும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க : IND vs SA 1st ODI LIVE Score: 40 ஓவர்களாக குறைந்த ஆட்டம்! டாஸ் வென்ற இந்தியா பவுலிங்! தெ. ஆ. பேட்டிங்!
மேலும் படிக்க : T20 World Cup 2022: கெத்தா மாஸா.. T20 உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா பறந்த இந்திய அணி...