Watch Video: "ரன் அவுட்தான்! ஆனா நாட் அவுட்" இந்தியா - நியூசிலாந்து போட்டியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் ரன் அவுட்டானபோதிலும், 3வது அம்பயர் நாட் அவுட் தந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ரன் அவுட்:
இந்த போட்டியில் நேற்று நடந்த ரன் அவுட் சம்பவம் ஒன்று ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு மிக கடுமையான விதிகளை கொண்ட விளையாட்டு. அது சில சமயம் அமல்படுத்தப்படும்போதுதான் ரசிகர்களுக்கு இதுபோன்ற விதிகள் இருப்பதே தெரிய வரும்.
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தபோது 14வது ஓவரை தீப்தி ஷர்மா வீசியுள்ளார். அப்போது, அந்த ஓவரின் கடைசி பந்தை நியூசிலாந்து வீராங்கனை அமெலியா கெர் எதிர்கொண்டார். அவர் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை நோக்கி பந்தை அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார்.
Amellia Kerr was out or not out ? #INDvsNZ #T20WorldCup #T20WomensWorldCup #harmanpreetkaur pic.twitter.com/y9PoOA2wSa
— ANUJ THAKKUR (@anuj2488) October 4, 2024
நாட் அவுட் தந்த அம்பயர்:
பந்தை ஹர்மன்ப்ரீத் எடுத்து வீசுவதற்குள் எதிர்திசையில் நின்ற நியூசிலாந்து கேப்டன் டிவைன் மற்றொரு ரன்னுக்கு அழைத்தார். ஆனால், அமெலியா கெர் ஒரு ரன் ஓடி முடிப்பதற்குள் ஹர்மன்ப்ரீத் கவுர் பந்தை வீச, அதைப் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ரன் அவுட் செய்தார்.
அவுட் என்று தெரிந்ததும் அமெலியா கெர் பெவிலியன் நோக்கி நடந்தார். கள நடுவர்கள் மூன்றாவது அம்பயருக்குச் சென்றனர். இந்திய வீராங்கனைகள் இந்த விக்கெட்டை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், 3வது அம்பயர் இதை நாட் அவுட் என்று கூறினார். இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்களும், இந்திய வீராங்கனைகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அம்பயரின் முடிவுக்கு காரணம் என்ன?
3வது நடுவர் நாட் அவுட் கொடுத்ததற்கு காரணத்தையும் விளக்கமாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத்திடம் களத்தில் இருந்த அம்பயர்கள் கூறினார்கள். அதாவது, கடைசி பந்தை வீசி முடித்த பிறகு தீப்தி ஷர்மா அம்பயரிடம் இருந்து தனது தொப்பியை வாங்கிவிட்டார். அப்போதுதான் அமெலியா கெர் இரண்டாவது ரன் எடுக்க ஓடினார். அதன்பின்பே, அவர் ரன் அவுட் செய்யப்பட்டார்.
ஐ.சி.சி. விதிப்படி பந்துவீச்சாளர் தனது தொப்பியை அம்பயரிடம் இருந்து வாங்கிவிட்டால் அந்த ஓவர் முடிந்துவிட்டதாகவே கணக்கில் கொள்ளப்படும். அதன்பின்பு, இந்த ரன் அவுட் நடந்ததால் இதை ஐ.சி.சி. விதிப்படி நாட் அவுட் என 3வது அம்பயர் அறிவித்தார். மேலும், சர்ச்சைக்குரிய இந்த பந்தை டெட் பால் என்று நடுவர்கள் அறிவித்தனர். இதனால், அமெலியா கெர் எடுத்த ரன்னும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த அவுட் காரணமாக இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், இந்திய பயிற்சியாளரும் அம்பயரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ரன் அவுட் வாய்ப்பில் இருந்து தப்பித்து மறுவாய்ப்பு கிடைத்த அமெலியா கெர் அடுத்த ஓவரிலே அவுட்டானார். அமெலியா கெர் 22 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.