Womens T20 WorldCup: டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்..!
மகளிர் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் லீக் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோத உள்ளது.
மகளிர் உலகக்கோப்பை தொடரின் லிக் போட்டியில் இந்திய அணி, இன்று இங்கிலாந்துடன் மோத உள்ளது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு, செயிண்ட் ஜார்ஜ் ஓவல் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஹாட்ஸ்டார் செயலியிலும் காணலாம்.
மகளிர் உலகக்கோப்பை தொடர்:
10 அணிகள் பங்கேற்றுள்ள எட்டாவது மகளிர் உலகக்கோப்பை தொடர், தென்னாப்ரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் உடனான லீக் போட்டியில் அபார வெற்றி பெற்றது. அதன் மூலம், புள்ளிப்பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அதேநேரம், தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி, வலுவான ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து மோதல்:
இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள, இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று மோத உள்ளன. இன்றைய போட்டியில் வென்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதோடு இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதால், இன்றைய போட்டி கடும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. செயிண்ட் ஜார்ஜ் மைதானத்தில் 150 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக கருதப்படுகிறது. அதோடு, ஆட்டத்தின் பின்பகுதியில் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. இந்திய அணியில் தீப்தி ஷர்மா உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெட் டு ஹெட்:
சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 19-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக டி-20 உலகக் கோப்பையை தொடர்களை பொறுத்தமட்டில், இரு அணிகளும் 5 முறை மோதியதில் அனைத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் வென்று இந்திய அணி வரலாற்றை மாற்றி அமைக்குமா என ரசிகர்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.
இந்திய உத்தேச அணி
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ் (வி.கே), பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா, தேவிகா வைத்யா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ரேணுகா சிங் தாக்கூர்
இங்கிலாந்து உத்தேச அணி:
சோபியா டன்க்லி, டேனியல் வியாட், ஆலிஸ் கேப்ஸி, நடாலி ஸ்கீவர், ஹீதர் நைட் (கே), எமி ஜோன்ஸ் (வி.கீ), கேத்ரின் ப்ரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லி டீன், சாரா க்ளென், லாரன் பெல்