Women's Ashes 2023: மகளிர் ஆஷஸ்.. இங்கிலாந்திற்காக முதல் இரட்டை சதம் அடித்த வீராங்கனை...! குவியும் பாராட்டுகள்..!
32 வயதான பியூமண்ட், இந்த சாதனைக்கு முன் 2வது நாளில் சதமடிக்கும்போது, மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார்.
2023 ஆம் ஆண்டுக்கான மகளிர் ஆஷஸ் தொடரின் 3 ஆம் நாளான நேற்று (ஜூன் 24, சனிக்கிழமை) டாமி பியூமண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு பெரிய சாதனைகளை முறியடித்தார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர், அந்த அணி எடுத்த மொத்த 331 ரன்களில் 208 ரன்களை எடுத்து இரட்டைச் சதம் அடித்த முதல் இங்கிலாந்து மகளிர் வீராங்கனை என்ற வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த சாதனை
32 வயதான பியூமண்ட், இந்த சாதனைக்கு முன் 2வது நாளில் சதமடிக்கும்போது, மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த உலகின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார். பின்னர் தொடர்ந்து 3வது நாளிலும் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்த இங்கிலாந்தின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதனால் அந்த ஆணி ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 473 ரன்களை நெருங்க முடிந்தது.
இங்கிலாந்திற்காக அதிகபட்ச ஸ்கோர்
பெட்டி ஸ்னோபாலின் 88 ஆண்டுகால பிரபல சாதனையை முறியடித்த அவர் டெஸ்டில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோரைப் குவித்து சாதனை படைத்தார். 3வது நாள் ஆட்டத்திற்குப் பிறகு, ப்யூமண்ட் கிரிக்கெட்டிலிருந்து கிட்டத்தட்ட விலக முடிவு செய்து இருந்ததாகவும், ஆனால் அதன்பின் முடிந்தவரை நேர்மறையாக இருக்க தனது மனநிலையை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் தனது 99வது ஆட்டத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு இங்கிலாந்தின் மகளிர் T20I போட்டியில் தனது இடத்தை இழந்தார்.
இப்போது திரும்பி வந்துள்ளேன்
"என்னுள் இன்னும் வாழ்க்கை இருக்கிறது. எனக்கு 32 வயதுதான் ஆகிறது," என்று பியூமண்ட் ஸ்கை ஸ்போர்ட்ஸிடம் கூறினார். "எனவே நான் கடினமாக உழைத்தேன், முடிந்தவரை நேர்மறையாக இருக்க என் மனநிலையை மாற்றிக்கொண்டேன், அதன்மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த டாமி பியூமண்ட்டாக திரும்பி வந்துள்ளேன். கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களாக நிச்சயமாக இப்படி செய்வேன் என்ற எண்ணம் என் மனதில் இல்லை," என்றார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் T20 விளையாட்டுகளுக்கு இடையேயான வித்தியாசத்தை எடுத்துரைத்தார்.
ஆஸ்திரேலிய அணி முன்னிலை
"டெஸ்ட்-போட்டி கிரிக்கெட் டி20 கிரிக்கெட்டில் இருந்து மிகவும் வித்தியாசமானது, இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் அதை மிகவும் ஒத்ததாக காட்ட முயற்சித்தாலும், அது அப்படியல்ல. இந்த கடினமான காலத்தில் நான் எப்படி வேலை செய்தேன் என்று நினைத்து பார்கிறேன். முழு உந்துதலோடு முயற்சி செய்து, என் விளையாட்டை மேம்படுத்தி உள்ளேன்," என்றார். பியூமாண்டின் இந்த சாதனை இன்னிங்ஸ் இருந்தபோதிலும், இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 463 ரன்களில் சரிந்தது.
இங்கிலாந்து அணிக்காக நடாலி ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் டேனியல் வியாட் ஆகியோர் மட்டுமே முக்கிய ரன்களை எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் இளம் ஆல்-ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 10 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய, ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களான ஃபியோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் பெத் மூனி 3-வது நாளில் ஆட்டமிழக்காமல் 82/0 என்ற ஸ்கோர் கார்டோடு வெளியேறி உள்ளனர். மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு முன்னதாக, இப்போதே அவர்கள் 92 ரன்கள் முன்னிலையைப் பெற்றுள்ளனர்.