Top Batters : டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு… ஃபின்ச், மாலனை பின்னுக்குத்தள்ளிய கான்வே! டாப் 5 பேட்ஸ்மேன்கள் யார்?
தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (853 ரேட்டிங் புள்ளிகள்) முன்னிலையில் உள்ளார். அடுத்தபடியாக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (838), பாக். கேப்டன் பாபர் ஆசாம் (808 புள்ளிகள்) ஆகியோர் உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இறுதி தரவரிசைப் பட்டியலை அறிவித்துள்ளது. பேட்டிங் பட்டியலில் முதலிடத்துக்கான போராட்டம் சூடுபிடித்த நிலையில், உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் எவ்வளவு நடந்தாலும், முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-பேட்டர் டெவோன் கான்வே, ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் மற்றும் இங்கிலாந்தின் டேவிட் மலான் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 760 ரேட்டிங் புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். தரவரிசையில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (853 ரேட்டிங் புள்ளிகள்) முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (838), பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் (808 புள்ளிகள்) ஆகியோர் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் நான்காவது இடத்தில் உள்ளார்.
முகமது ரிஸ்வான்
பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், தற்போது ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார், கடந்த சில மாதங்களாகவே அவர்தான் முதலிடத்தில் உள்ளார். ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர் முகமது ரிஸ்வான், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரிலும் அதிக ரன்களை குவித்தார். மேலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடந்து வரும் டி20 முத்தரப்பு தொடரிலும் அதிக ரன்களை குவித்துவருகிறார். இந்த முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானில் முதல் போட்டியில் 78 ரன்கள் எடுத்து நோட் அவுட் ஆகாமல் இருந்தார். ஆனால் அதன் பிறகு பெரிய பங்களிப்பு எதுவும் பெரிதாகி செய்யவில்லை. சூர்யகுமார் யாதவை விட அவர் 15 புள்ளிகள் மட்டுமே முன்னிலையில் உள்ளார். மேலும் பாபர் அசாம் 30 புள்ளிகள் பின்தங்கி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்: கதறி கதறி அழுத ஜி.பி.முத்து... விடிய விடிய பிக்பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்து!
சூர்யகுமார் யாதவ்
இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் முகமது ரிஸ்வானை விட 15 புள்ளிகள் பின்தங்கி தற்போது உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை எடுத்ததோடு, சில மேட்ச்-வின்னிங் அதிரடி ஆட்டங்களை ஆடினார். இந்திய அணி மிடில் ஆர்டரில் அவரை பெரிதும் நம்பியுள்ளது. வரவிருக்கும் T20 உலகக்கோப்பை போட்டியில், அவர் தனது ஃபார்மை தக்க வைத்துக் கொள்வார் என்று இந்திய அணி எதிர்பார்க்கிறது.
பாபர் அசாம்
இந்த பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இவரை 2-வது இடத்தில் இருந்து பின் தள்ளினார். சமீப காலங்களில் பாபர் அசாம் அவருடைய வழக்கமான ஃபார்மில் இல்லை. ஆசியக் கோப்பை போட்டிகளிலும் பெரிதாகி சோபிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை. பாபர் ஆசாமின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. மேலும் அவர் வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில், அவரது பேட்டிங் மூலம் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க விரும்புகிறார்.
எய்டன் மார்க்ரம்
இந்த உயரடுக்கு பட்டியலில் இடம்பிடித்த நான்காவது வீரர் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஆவார். அவர் பல ஆண்டுகளாக தென் ஆப்பிரிக்க அணிக்கு ஒரு நிலையான ஆட்டகாரராக இருந்து வருகிறார். மேலும் சில காலமாகவே முதல் 10 இடங்களில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். வரவிருக்கும் T20 உலகக்கோப்பை போட்டியிலும் பல அணி பவுளர்களுக்கு சவால் விடுவார் என்று தெரிகிறது.
டெவோன் கான்வே
ஐசிசியின் சமீபத்திய டி20 தரவரிசையில் நியூசிலாந்து நட்சத்திர வீரர் டெவோன் கான்வே முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். நியூசிலாந்தில் நடந்து வரும் டி20ஐ முத்தரப்பு தொடரில் முன்னணி ரன்களை குவித்தவரான டெவோன் கான்வே, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார். கான்வே பங்களாதேஷுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 70 ரன்களையும், பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 49 ரன்களையும் எடுத்த நிலையில், ஆரோன் ஃபின்ச் மற்றும் டேவிட் மலானைத் தாண்டி 760 ரேட்டிங் புள்ளிகளுடன் முதல் ஐந்து இடங்களுக்கும் வந்துள்ளார்.