IND vs WI 2nd T20: இன்னும் சற்று நேரத்தில் 2வது டி20.. மீண்டும் சம்பவம் செய்யுமா வெ.இண்டீஸ்..? பதிலடி தருமா இந்தியா?
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனவும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்று அசத்தியது. குறிப்பாக ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மற்றும் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் இந்திய அணி களமிறங்கி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் தான், 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடங்கி நடைபெற்றுவருகிறது.
டிரினிடாட் அண்ட் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டும் எடுத்தது. கடைசி ஓவரில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரில் அந்த அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி களமிறங்கிய 200வது டி-20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி, கயானாவில் உள்ள ப்ராவிடன்ஸ் மையாதனத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய அணி இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிடாக 26 டி20 போட்டிகளில் விளையாடி 17 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
இந்திய டி20 அணி
யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னோய், திலக் வர்மா.
வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி
கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷாய் ஹோப், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், அகில் ஹுசைன், அல்ஸாரி ஜோசப், ஓபேட் மெக்காய், ஓஷேன் தாமஸ், பிராண்டன் கிங், ஓடியன் ஸ்மித், ரோஸ்டன் சேஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.