Shai Hope Record : ஷாய் ஹோப் புதிய சாதனை...! 100வது போட்டியில் சதம் அடித்து அசத்தல்...!
100வது ஒருநாள் போட்டியில் ஆடிய வெஸ்ட் இணடீஸ் வீரர் ஷாய் ஹோப் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா மோதும் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பூரண் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப்- மேயர்ஸ் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் 65 ரன்களை எட்டியபோது இந்த ஜோடியை பகுதி நேரப்பந்துவீச்சாளர் தீபக்ஹூடா பிரித்தார். அதிரடியாக ஆடிய மேயர்ஸ் 23 பந்தில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய ப்ரூக்ஸ் – ஹோப் ஜோடியும் சிறப்பாக ஆடியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை அக்ஷர் படேல் பிரித்தார். அவரது பந்தில் ப்ரூக்ஸ் 36 பந்தில் 5 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினர். கடந்த போட்டியில் அசத்திய ப்ரண்டன் கிங் ப்ரூக்ஸ் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கினார். அவர் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சாஹல் அதிர்ச்சி அளித்தார். ப்ரண்டன் கிங் டக் அவுட்டாகி சாஹல் பந்தில் வெளியேறினார்.
130 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்ததால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது, ஷாய் ஹோப்புடன் – கேப்டன் நிகோலஸ் பூரண் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். குறிப்பாக, பூரண் நிதானமாகவும், அதே சமயம் சி்கஸர்களையும் விளாசினார். தொடக்கம் முதலே பொறுப்புடன் ஆடி வந்த ஹோப்பும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும், ஓரிரு ரன்களாகவும் விளாசினார். பின்னர், சதமடித்து அசத்தினார். ஷாய் ஹோப்பிற்கு இது 13வது சதம் ஆகும். ஒட்டுமொத்த அளவில் 100வது ஒருநாள் போட்டியில் ஆடி சதமடித்த 10வது வீரர், இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
28 வயதான ஷாய் ஹோப் இதுவரை 100 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 171 ரன்களை விளாசியுள்ளார். அதில் 13 சதங்களும், 21 அரைசதங்களும் அடங்கும். 38 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2 சதங்கள், 5 அரைசதங்ளுடன் 1,726 ரன்களை விளாசியுள்ளார். 19 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதங்களுடன் 304 ரன்களை எடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்