Virat Kohli: ஐ.பி.எல். தொடருக்கு முன்பே சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட்கோலி...? வரலாறு சாத்தியமா...?
ஐ.பி.எல். தொடருக்கு முன்பாகவே விராட்கோலி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கிரிக்கெட் உலகின் ஹாட் டாக்காக மீண்டும் மாறியுள்ளார் விராட்கோலி. திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட்கோலி விளாசிய 166 ரன்கள் ஆரம்ப காலத்தில் நாம் பார்த்த ஆக்ரோஷமான விராட்கோலியை நமக்கு நினைவூட்டியது.
மிரட்டும் விராட்:
அதுவும் கடைசியாக ஆடிய 4 ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் சதமடித்து அசத்தியுள்ள விராட்கோலியை கிங் இஸ் பேக் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விராட்கோலி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 46 சதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலே அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு இன்னும் 4 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
இதனால், விராட்கோலி விரைவில் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் விரைவில் 2023ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரில் களமிறங்க உள்ளனர். இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது.
சச்சினை வீழ்த்துவாரா..?
3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு நியூசிலாந்து வருகிறது. நாளை மறுநாள் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹைதரபாத்தில் நடைபெற உள்ளது. ராய்ப்பூரில் 2வது போட்டியும், இந்தூரில் 3வது போட்டியும் நடைபெற உள்ளது. சொந்த மண் என்பது விராட்கோலிக்கு கூடுதல் பலம் என்பதால் விராட்கோலி நிச்சயம் தனது ஆதிக்கத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கலாம்.
பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. மார்ச் 17ந் தேதி மும்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா தங்களது முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. மார்ச் 19-ந் தேதி விசாகப்பட்டினத்தில் 2வது ஒருநாள் போட்டியும், சென்னையில் 3வது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது.
வாய்ப்பு எப்படி..?
கோடை விருந்தாக நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு இன்னும் 4 சதங்கள் தேவைப்படுகிறது. இதனால், கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு விராட்கோலிக்கு அதிகளவில் உள்ளது. 34 வயதான விராட்கோலி இதுவரை 268 ஒருநாள் போட்டிகளில் ஆடி 64 அரைசதங்கள், 46 சதங்களுடன் 12 ஆயிரத்து 754 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன்களை விளாசியுள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மொத்தம் 6 ஒருநாள் போட்டியில் ஆட உள்ளதால் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளார்.
மேலும் படிக்க: Kohli Incredible Record: கோலிக்கும் பொங்கல் நாளான தை முதல் நாளுக்கும் தொடரும் பந்தம்.. இப்படியும் ஒரு சாதனையா..!