AFG vs SCT, 1 Innings Highlight: ஒரே ஓவரில் 3 விக்கெட்.. பந்துவீச்சில் மாஸ் காட்டும் ஆப்கான்.. தடுமாறும் ஸ்காட்லாந்து..!
ICC T20 WC 2021, AFG vs SCT: ஷாசாய், குர்பாஸ், நஜீபுல்லா ஆகியோர் அரைசதத்தால் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி 190 ரன்களை குவித்துள்ளது.
உலகக்கோப்பை டி20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் 2ல் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தானும், ஸ்காட்லாந்தும் இன்று நேருக்கு நேர் மோதின. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வன்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. இதன்படி, ஆட்டத்தை தொடங்கிய ஆப்கானிஸ்தானின் ஹசரத்துல்லா ஷஜாயும், முகமது ஷசாத்தும் அதிரடியாகவே ஆடினர்.
குறிப்பாக, ஷஜாய் பட்டாசாய் வெடித்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஷாசாத் 15 பந்தில் 1 சிக்ஸர் 2 பவுண்டரியுடன் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஷரீப் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, களமிறங்கிய குர்பாசும் அதிரடிக்கு பஞ்சமில்லாமல் ஆடினார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த தொடக்க வீரர் ஷஜாய் 30 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர், மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த குர்பாசும், நஜூபுல்லா ஜட்ரானும் வானவேடிக்கை காட்டினர். 82 ரன்னில் ஜோடி சேர்ந்த இருவரும் 165 ரன்கள் எட்டியபோதுதான் பிரிந்தனர். அதாவது 9வது ஓவர் முதல் 19வது ஓவர் வரை இருவரும் பேட்டிங் செய்தனர். அணியின் ஸ்கோர் 169 ரன்களை எட்டியபோது 37பந்தில் 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார், பின்னர், ஆட்டத்தின் கடைசி பந்தில் அதிரடி காட்டிய நஜீபுல்லா ஆட்டமிழந்தார். அவர் 34 பந்தில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 59 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஸ்காட்லாந்து அணியில் மார்க் வாட் மட்டும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார். அந்த அணியின் வீல் மற்றும் டேவ் ரன்களை வாரி வழங்கினர். இதனால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை குவித்தது. தற்போது, 191 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சேவும் அதிரடியாக ஆடி வருகிறார்.
அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஸ்காட்லாந்து வேகத்திற்கு முஜிப் முட்டுக்கட்டை போட்டார். அவரது சுழலில் ஒரே ஓவரில் கேப்டன் கைல் கொய்ட்ஜெரும், மெக்லெட், ரிச்சி பெரிங்கடன் ஆட்டமிழந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 4வது விக்கெட்டாக நவீன்உல்ஹக் பந்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ கிராஸ் டக் அவுட்டானார். சற்றுமுன் வரை அந்த அணி 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்