"மேற்கிந்தியத் தீவுகள் உடனான தோல்வி கற்பிப்பது இதைத்தான்…" பயிற்சியாளர் ராகுல் டிராவிட்..!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தோல்வியை அடுத்து, அணிக்கு ஏற்பட்டுள்ள பெரிய கவலைகள் குறித்து பேசியுள்ளார்.
ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை என அடுத்தடுத்து பெரிய தொடர்கள் வரும் நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக T20 தொடர் தோல்விக்கு பிறகு, பயிற்சியாளர் டிராவிட், அணி குறித்து கவலைகள் எழுப்பியுள்ளார்.
சரிந்த இந்திய அணியின் வெற்றி விகிதம்
விராட் கோலி, இந்திய அணிக்கு ஒயிட்-பால் கேப்டனாக இருந்த 2017 மற்றும் அக்டோபர் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில், இருதரப்பு தொடர்கள் மற்றும் பல நாடுகளின் நிகழ்வுகளை உள்ளடக்கிய ODI மற்றும் T20I போட்டிகளில் இந்தியா 80 சதவீத வெற்றியைப் பெற்றிருந்தது. 2021 டி20 உலகக் கோப்பையில் கோலியின் தலைமையில் இந்திய அணி அதிர்ச்சியூட்டும் வகையில், குரூப் ஸ்டேஜிலெயே வெளியேற்றத்தை சந்தித்தது.
அதன்பிறகு விளையாடிய 27 போட்டிகளில் இந்தியா 68 சதவீதம் வென்று சாதனையை படைத்துள்ளது. 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வியடைவதற்கு முன்பு டி20 ஆசியக் கோப்பையிலும் இந்தியா தோல்வியடைந்தது. அதே நேரத்தில் வங்கதேசம் (ODI) மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் (T20I) சுற்றுப்பயணங்களில் தோல்விகளை பதிவு செய்தது. இந்தியா இப்போது செப்டம்பரில் ஆசிய கோப்பைக்கு தயாராகி வருகிறது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் ODI உலகக் கோப்பை,l நடைபெற உள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான T20I தோல்வியை அடுத்து, அணிக்கு ஏற்பட்டுள்ள பெரிய கவலைகளை குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணியில் என்ன பிரச்சனை?
இந்தியாவின் தோல்விக்குப் பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங் திறமையை அதிகரிக்குமாறு வலியுறுத்தினார். டிராவிட் அணியில் அதற்கான ஆப்ஷன்கள் இல்லாததால் அவர்களின் கைகள் கட்டப்பட்டதாக ஒப்புக்கொண்டார். அல்சாரி ஜோசப் போன்ற ஒரு வீரர் நம்பர் 11 இல் களமிறங்குவது, வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் பேட்டிங்கின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது என்று அவர் மேலும் கூறினார். "இங்குள்ள எங்கள் அணியைப் பொறுத்தவரை, பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும் வாய்ப்பு, பெரிதாக இல்லை என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
பேட்டிங் ஆழம் வேண்டும்
"ஆனால் இனிவரும் காலங்களில், நாம் சிறப்பாகச் செயல்பட வேண்டிய சில பகுதிகளை கவனிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பேட்டிங்கில் ஆழத்தைக் கண்டறிவது என்பது நாங்கள் கவனிக்க முயற்சிக்கும் ஒரு பகுதியாகும். நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம், ஆனால் அதுதான் நிச்சயமாக நாம் பார்க்கக்கூடிய ஒரு பகுதி. அதற்காக, நமது பந்துவீச்சு தாக்குதலை பலவீனப்படுத்த முடியாது. ஆனால் பேட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழம் இருப்பதை உறுதிசெய்ய முயற்சிக்கிறோம்," என்றார்.
அயர்லாந்து தொடர்
மேலும் பேசிய டிராவிட் "நீங்கள் வெஸ்ட் இண்டீஸைப் பார்த்தால், அவர்கள் அல்ஸாரி ஜோசப்பை நம்பர் 11 இல் இறக்குகிறார்கள். அவர் ஒரு சுமாரான பேட்ஸ்மேனும் கூட. எனவே அந்த அணிக்கு அந்த ஆழத்தை தரும் வீரர்கள் உள்ளனர். வெளிப்படையாக, அந்த விஷயத்தில் எங்களுக்கு சில சவால்கள் உள்ளன, நாங்கள் அதை சரி செய்ய வேண்டும். இது நிச்சயமாக இந்தத் தொடர் நமக்குக் காட்டிய பெரிய விஷயங்களில் ஒன்று. வரும் காலங்களில் அந்த ஆழத்தை நாம் உருவாக்க வேண்டும்." என்றார்.
அயர்லாந்தில் ஆகஸ்ட் 18 மற்றும் 23 க்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் இந்திய அணி அடுத்ததாக களம் காண்கிறது. இதில் கோஹ்லி, ரோஹித் சர்மா, ஹர்திக் உள்ளிட்ட சில பெரிய சீனியர் வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி செல்ல உள்ளது. அந்த போட்டிக்கு வழிகாட்ட டிராவிட் கூட செல்ல மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சமீபத்தில் முடிவடைந்த T20I தொடரில் இருந்த 5 வீரர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.