World Cup 2023: இன்னும் 50 நாட்களில் உலகக்கோப்பை திருவிழா.. வேர்ல்ட் கப் ஃபீவரில் ரசிகர்கள்..!
12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடத்தப்படும் உலகக்கோப்பை என்பதால், இந்த உலகக்கோப்பைக்கு இந்திய ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்றிலிருந்து இன்னும் ஐம்பதே நாளில் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்களின் ஆர்வம் உச்சத்தை அடைந்துள்ளது.
உலகக்கோப்பை 2023
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த தொடர் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதுவே இந்தியா வென்ற கடைசி உலகக்கோப்பை ஆகும். அதன் பின் 2013 இல் சாம்பியன்ஸ் டிராஃபி வென்றது.
அதுவே இந்திய அணி கடைசியாக வென்ற ஐசிசி கோப்பை. கிரிக்கெட்டின் முக்கிய அணியாக திகழும் இந்திய அணி, பத்தாண்டுகளாக ஐசிசி கோப்பைகள் வெல்லாத அணியாக இருப்பது பலருக்கும் ஆச்சர்யம் அளித்தது. இந்த நிலையில் 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் நடத்தப்படும் உலகக்கோப்பை என்பதால், இந்த உலகக்கோப்பைக்கு இந்திய ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
டிக்கெட் விற்பனை
இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லா டிக்கெட்டுகளும் ஒரே நேரத்தில் கிடைக்காது, போட்டிக்கு தகுந்தாற்போல் டிக்கெட்டுகள் ஓபன் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. எப்போதும் போல அதிக எதிர்பார்ப்பை பெரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி அகமதாபாத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபபட்டுள்ளது. அந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 03 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடக்கும் போட்டி
இந்திய அணிக்கு முதல் போட்டி சென்னையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. அந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு தொடரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட் ஸ்டாரில் காணக்கிடைக்கும் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
5⃣0⃣ days to go for #CWC23 🤩🏆 pic.twitter.com/mDAzHF5oSY
— ICC (@ICC) August 16, 2023
இன்னும் ஐம்பது நாட்களே உள்ளன
இந்த தொடருக்கான அணிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. எந்த அணியும் இன்னும் இறுதி அறிவிப்பை வெளியிடவில்லை. இந்திய அணி ஆசியக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அணி அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது. இன்னும் இந்திய அணியின் பந்துவீச்சு காம்போ மட்டும் பேட்டிங் ஆர்டர் முழுவதுமாக முடிவாகாமல் குழப்பத்தில் இருப்பதால், அநேகமாக கடைசியாக அணியை அறிவிக்கும் அணி இந்திய அணியாக தான் இருக்கும் என்று தெரிகிறது. இன்னும் எண்ணி ஐம்பது நாட்களே இருக்கும் நிலையில், விரைவாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்வுக்குழு உள்ளது. அதே நேரத்தில் நாட்கள் நெருங்க நெருங்க 'வேர்ல்டு கப் ஃபீவர்' மக்கள் மத்தியில் பரவத் தொடங்கி உள்ளது.