ODI WC 2023: ஒரு போட்டி.. ஆஸ்திரேலிய அணியின் மூன்று சாதனை.. விவரம் இதோ!
நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி மூன்று சாதனைகளை படைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்டோபர் 25) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
முன்னதாக இந்த போட்டியில் மூன்று சாதனைகளை ஆஸ்திரேலிய அணி படைத்துள்ளது. அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
சச்சின் சாதனையை சமன் செய்த வார்னர்:
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக சதம் (6) அடித்தவர்கள் பட்டியலில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார்.
அதன்படி, 93 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என மொத்தம் 104 ரன்களை குவித்தார். இந்த பட்டியலில் 7 சதங்களுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 7 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
அதிவேக சதம்:
ஆஸ்திரேலிய அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இன்றைய நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 40 பந்துகளில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக உள்ளது.
முன்னதாக இந்த உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 49 பந்துகள் தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரம் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதேபோல், இதற்கு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டும் உலகக்கோப்பை தொடரின் போது இலங்கை அணிக்கு எதிராக 51 பந்துகளில் கிளென் மேக்ஸ்வெல் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி:
நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையை ஆஸ்திரேலிய அணி பெற்றிருக்கிறது. முன்னதாக, சர்வதேச அளவில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற பெருமை இந்திய அணியிடம் இருக்கிறது. அதன்படி, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணிக்கு எதிராக பெற்ற வெற்றியே சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக உள்ளது.
மேலும் படிக்க: Australia vs Netherlands: வார்னர்... மேக்ஸ்வெல் அதிரடி..! நெதர்லாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: ODI WC 2023: உலகக்கோப்பையிலே மிகப்பெரிய வெற்றி! 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!