Australia vs Netherlands: வார்னர்... மேக்ஸ்வெல் அதிரடி..! நெதர்லாந்து அணிக்கு 400 ரன்கள் இலக்கு!
நெதர்லாந்து அணிக்கு 400 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா.
ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெறுகிறது.
அந்த வகையில், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் 24-வது லீக் போட்டி இன்று (அக்டோபர் 25) நடைபெற்று வருகிறது. இதில், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இன்றைய போட்டியில், முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினார்கள்.
15 பந்துகள் களத்தில் நின்று 9 ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செல் ஆட்டமிழக்க, மறுபுறம் டேவிட் வார்னர் சிறப்பாக விளையாடினார்.
வார்னர் அதிரடி:
மொத்தம் 93 பந்துகள் களத்தில் நின்ற அவர் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 104 ரன்களை குவித்தார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை (6 சதம்) சமன் செய்துள்ளார்.
அதேபோல் மறுபுறம் மிட்செல் மார்ஸ் விக்கெட் இழப்பிற்கு பிறகு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித்தும் சிறப்பாக விளையாடினார். 68 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 71 ரன்கள் அடித்து 24 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய மார்னஸ் லாபுசாக்னே டேவிட் வார்னருடன் இணைந்து விளையாடினார்.
அதன்படி, மார்னஸ் லாபுசாக்னே 47 பந்துகளில், 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குறைந்த பந்துகளில் சதம் அடித்த மேக்ஸ்வெல்:
பின்னர் வந்த ஜோஷ் இங்கிலிஸ் 14 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கிளென் மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடினார். வெறும் 40 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் , குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
44 பந்துகளில் களத்தில் நின்ற அவர், 9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என மொத்தம் 109 ரன்கள் குவித்தார்.
இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நெதர்லாந்து அணி களமிறங்க உள்ளது.
மேலும், நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர் லோகன் வான் பீக் 10 ஓவர்கள் வீசி 74 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் படிக்க: Asian Para Games: ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி.. பதக்க வேட்டையை தொடரும் இந்தியா..
மேலும் படிக்க: ODI WC 2023 Maxwell: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேக சதம்! 40 பந்துகளில் வரலாறு படைத்த மேக்ஸ்வெல்!