Commonwealth Games 2022:காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட்.. தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு
காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இந்திய மகளிர் அணி அடுத்து காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தானா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் ஷெஃப்லி வெர்மா, எஸ்.மேக்னா, தானியா பாட்டியா,யாஸ்டிகா பாட்டியா,தீபிதி சர்மா, ராஜேஸ்வரி கெய்க்வாட்,பூஜா வத்சரேக்கர்,மேக்னா சிங், ரேனுகா தாகூர்,ஜெமிமா ரோட்ரிக்ஸ்,ராதா யாதவ், ஹர்லின் தியோல் மற்றும் சினேஹ் ரானா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
🚨 NEWS 🚨: #TeamIndia (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced. #B2022 | @birminghamcg22 pic.twitter.com/lprQenpFJv
— BCCI Women (@BCCIWomen) July 11, 2022
இவர்கள் தவிர சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ் மற்றும் பூனம் யாதவ் ஆகியோர் ரிசர்வ் வீராங்கனைகளாக உள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாமில் வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆடவர் கிரிக்கெட் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெறவில்லை. மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
அதில் இந்திய மகளிர் அணி குரூ ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்பேடாஸ் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. பி பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இவை அனைத்தும் இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளன. மகளிர் கிரிக்கெட் போட்டிகள் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. குரூப் சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகள் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடும். எனினும் காமன்வெல்த் போட்டிகளில் இம்முறை ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் சேர்க்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்