Udhayanidhi Stalin: 'எனக்கே கிரிக்கெட் பாக்க டிக்கெட் கிடைக்கல..' விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலகல..!
சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றனர்.
சென்னையில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டியைக் காண தனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொன்ன தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.
இதனிடையே 3வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. நேற்றைய தினம் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றனர். கடைசியாக இந்த மைதானத்தில் 2019 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது.
டிக்கெட் கிடைக்கவில்லை
இதற்கிடையில் அம்மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், 4 வருடங்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. அதுவும் நீங்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பிறகு நடக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டுள்ளது? என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு உதயநிதி சிரித்துக் கொண்டே, இந்த போட்டி நடைபெறுவதற்கும் அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். கொரோனா தொற்று, சில வேலைகள் காரணமாக போட்டிகள் நடக்கவில்லை. ஒருநாள் போட்டிக்கு எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இருந்தால் கொடுங்கள் என தெரிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் கிரிக்கெட் போட்டியை பார்க்க செல்வாரா? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு எனக்கு தெரியவில்லை என உதயநிதி பதிலளித்தார்.