India vs Pakistan: இந்திய அணியை எச்சரித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்..காரணம் என்ன?
T20 World Cup 2024: நாளை (ஜூன் 9 )ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான்:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஜூன் 9 ) ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இதில் கத்துக்குட்டி அணிகளாக பார்க்கப்படும் அமெரிக்கா, கனடா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படும் அணிகளை அலறவிட்டு வருகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக அமெரிக்க அணி இந்த முறை தான் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றது. அதேபோல் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அந்த அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது தான்.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை குரூப் ஏ பிரிவில் அமெரிக்க அணி தான் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணி உள்ளது. இச்சூழலில் தான் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை 8 மணிக்கு நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.
இந்திய அணியை எச்சரித்த பாகிஸ்தான் வீரர்:
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை என்று நான் நினைக்கிறேன்.
டி20 உலகக் கோப்பையில் ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து விராட் கோலியை ஓபனிங் பேட்ஸ்மேனாக அனுப்புவதாக பிசிசிஐ கூறுவது மிகப்பெரிய தவறு. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஓபனிங் வீரராக களமிறங்கி தடுமாறிய விராட் கோலி 5 பந்துகள் மட்டுமே களத்தில் நின்றார்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அந்த போட்டியில் அவர் 1 ரன் மட்டுமே எடுத்தார். எனவே அவரை 3 வது வீரராக களம் இறக்குவது தான் நல்லது. அப்படி களம் இறங்கினால் தான் மிடில் ஓவர்களில் அவரால் சிறப்பாக விளையாட முடியும். அதேபோல் போட்டியில் அழுத்தம் ஏற்படும் போது அவர் 3 வது வீரராக இறங்கி விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
விராட் கோலிக்கு பதிலாக இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்” என்று கம்ரன் அக்மல் கூறியுள்ளார். நாளை நடைபெறும் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக இறங்கிய அதே பேட்டிங் ஆர்டரில் தான் இந்திய அணி களம் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.