T20 WC IND vs PAK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நேருக்கு நேர் மோதும் இந்தியா - பாகிஸ்தான்! வெற்றி யாருக்கு?
IND vs PAK T20 World Cup: டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதும் போட்டி இன்று நியூயார்க் நகரத்தில் மோதுகின்றன.
அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் பல ஆச்சரியமான, அதிர்ச்சிகரமான முடிவுகள் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
இன்று மோதும் இந்தியா - பாகிஸ்தான்:
இந்த சூழலில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று நடக்கிறது. சாதாரணமாக இரு நாட்டு அணிகளும் மோதிக்கொண்டாலே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படும், அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் இரு அணிகளும் மோதிக் கொண்டால் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து காணப்படும்.
இந்த சூழலில், நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இரு அணிகளும் முதன்முறையாக மோதுகின்றன. இந்த தொடர் தொடங்கியது முதலே அமெரிக்காவின் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சவாலானதாக அமைந்து வருகிறது.
பேட்டிங் எப்படி?
இதனால், நியூயார்க் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையுமா? பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் பலமாக கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப்பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளனர்.
கடந்த போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டானாலும், கடந்த டி20 உலகக்கோப்பையைப் போல நடப்பு உலகக்கோப்பையைத் தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். கிடைக்கும் வாய்ப்பை இளம் வீரரான ஷிவம் துபே சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் பலமாக முகமது ரிஸ்வான், பாபர் அசாம், உஸ்மான் கான், பக்கர் ஜமான், ஷதாப்கான் உள்ளனர். அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாபர் அசாம், ஷதாப் கான் மட்டுமே சிறப்பாக ஆடினார். இந்தியாவுக்கு எதிராக அவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இப்திகார் அதிரடியாக ஆடினால் இந்திய அணிக்கு பெரும் சிரமம் ஆகும்.
பவுலிங் எப்படி?
பந்துவீச்சைப் பொறுத்தவரை பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப். நசீம் ஷா, அமீர் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்படும். இந்திய அணியைப் பொறுத்தவரையில் பந்துவீச்சு பலமாக பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் உள்ளனர். அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப்சிங் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
பயிற்சி ஆட்டத்திலும், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக ஆட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா, அக்ஷர் படேல் சிறப்பாக பந்துவீசினால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஆவது உறுதியாகும்.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு இந்திய நேரப்படி நடக்கிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையில் காணலாம்.