T20 World Cup IND vs AFG Match Highlights: சூப்பர் 8 சுற்று.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை 2024:
ஐசிசி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன் 20) நடைபெற்ற போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தவகையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ரோஹித் ஷர்மா 13 பந்துகள் களத்தில் நின்று 8 ரன்களில் நடையைக் கட்டினார். அப்போது களத்திற்கு வந்தார் ரிஷப் பண்ட். கோலி மற்றும் பண்ட் ஜோடி நிதானமாக விளையாடியது. இதனிடையே ரிஷப் பண்ட் விக்கெட்டை பறிகொடுத்தார். 11 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 பவுண்டரிகள் விளாசி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
அப்போது விராட் கோலி விக்கெட்டை பறிகொடுத்தார். 24 பந்துகள் களத்தில் நின்ற அவர் 24 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே ஷிவம் துபே 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.
மறுபுறம் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் மொத்தம் 28 பந்துகள் களத்தில் நின்று 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 53 ரன்கள் எடுத்தார். அதேபோல் ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இவ்வாறாக இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி வெற்றி:
India start their Super Eight phase in style 🤩
— ICC (@ICC) June 20, 2024
They register a thumping victory in Barbados on the back of a Jasprit Bumrah masterclass 👏#T20WorldCup | #AFGvIND | 📝: https://t.co/Bpkf5WGyh1 pic.twitter.com/E5Cdf95hX0
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்க்கை தொடங்கியது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் களம் இறங்கினார்கள். குர்பாஸ் 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த இப்ராஹிம் சத்ரான் 8 ரன்களில் நடையைக்கட்டினார்.
அதேபோல் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆப்கானிஸ்தான் அணி. பின்னர் வந்த அஸ்மத்துல்லா உமர்சாய் ஓரளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 26 ரன்களை எடுத்தார். நஜிபுல்லா சத்ரன் 19 ரன்கள் எடுக்க முகம்மது நபி 14 ரன்களுடன் நடையைக்கட்டினார். அடுத்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தவகையில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.