Watch Video: ரொனால்டோ பாணியில் கோகோ-கோலாவை ஓரங்கட்டிய வார்னர் -வைரல் வீடியோ உள்ளே...!
ரொனால்டோ பாணியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கோகோ-கோலா பாட்டிலை ஓரங்கட்டியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலககோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியாவும், இலங்கை அணிகளும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயித்த 154 ரன்கள் இலக்கை, டேவிட் வார்னரின் அதிரடியால் ஆஸ்திரேலியா 17வது ஓவரிலே எட்டிப்பிடித்தது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது 42 பந்தில் 65 ரன்களை குவித்த டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது.
— Hassam (@Nasha_e_cricket) October 28, 2021
வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற ஆஸ்திரேலியா தொடக்க வீரர் டேவிட் வார்னர் பேட்டி அளித்தார். அவர் பேட்டி அளிக்கும் இடத்தில் மைக்கிற்கு முன்னால் இரண்டு தண்ணீர் பாட்டில்களுடன் கோலா பாட்டில்கள் இரண்டு வைக்கப்பட்டிருந்தது.
பேட்டி அளிப்பதற்கு முன்பு வார்னர் தனது இருக்கையில் அமர்ந்தவுடன், தன் முன்னால் இருந்த கோலா பாட்டில்கள் இரண்டையும் தனது மேசையில் இருந்து எடுத்து கீழே வைத்துக்கொண்டார். பின்னர், சிறிய புன்னகையுடன் அந்த கோலா பாட்டில்களை மேலே எடுத்து வைத்துவிட்டு, “ கிறஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஒருவேளை இது போதும் என்றால், எனக்கும் இது போதும்” என்றார்.
உலகளவில் மாபெரும் கால்பந்து வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா ரொனால்டோ கடந்த ஜூன் மாதம் ஹங்கேரி நாட்டிற்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பேட்டி அளிப்பதற்கு முன்பு தனக்கு முன்னால் இருந்த கோகோ-கோலா பாட்டிலை ஒதுக்கி வைத்து தண்ணீரை தேர்வு செய்தார்.
ரொனால்டோவின் இந்த செயலால் கோகோ-கோலா நிறுவனம் 5.1 பில்லியன் டாலர் இழப்பைச் சந்திக்க நேரிட்டது. மேலும், பங்குச்சந்தைகளில் கோகோ-கோலாவின் மதிப்பு கடுமையாக சறுக்கியது. இதை நினைவூட்டும் வகையில் வார்னரும் தற்போது செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வார்னரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், ஐ.பி.எல். தொடரிலும் பெரியளவில் சோபிக்காமல், உலககோப்பை பயிற்சி போட்டிகளிலும் சோபிக்காத வார்னர் தனது பார்மிற்கு நேற்றைய போட்டி மூலம் திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்