T20 Records: ரிஸ்வான், பாபர் அசாம், விராட் கோலி.. டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன் அடித்தவர்கள் யார் தெரியுமா?
சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் யார்?
பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றியது. இந்த தொடருடன் இந்தாண்டு சர்வதேச டி20 போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்தாண்டு அதிகமாக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை முகமது ரிஸ்வான் பெற்றுள்ளார். அத்துடன் ஒரே ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் யார் யார்?
விராட் கோலி:(2016)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டி20 கேப்டன் விராட் கோலி 2016-ஆம் ஆண்டு சிறப்பான ஃபார்மில் இருந்தார். அந்த ஆண்டு நடைபெற்ற 15 டி20 போட்டிகளில் 641 ரன்கள் அடித்தார். அதில் 7 முறை அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
ஷிகர் தவான்(2018):
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் 2018ஆம் ஆண்டு 18 டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதில் மொத்தமாக 689 ரன்கள் அடித்து விளாசினார். மேலும் அந்த ஆண்டு டி20 போட்டிகளில் 6 முறை அரைசதம் கடந்து அசத்தினார்.
பால் ஸ்டெர்லிங்(2019):
2019ஆம் ஆண்டு அயர்லாந்து அணியின் பால் ஸ்டெர்லிங் 20 டி20 போட்டிகளில் பங்கேற்றார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 8 அரை சதங்கள் விளாசினார். அத்துடன் 749 ரன்கள் அடித்து அசத்தினார்.
பாபர் அசாம்(2021):
2021-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருக்கும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இவர் இருவரும் இந்தாண்டு மட்டும் 29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். அதில் பாபர் அசாம் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்களுடன் 939 ரன்கள் அடித்துள்ளார்.
முகமது ரிஸ்வான்(2021):
பாகிஸ்தான் அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் 29 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 12 அரை சதங்களுடன் 1326 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளின் வரலாற்றில் ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை முகமது ரிஸ்வான் படைத்துள்ளார்.
மேலும் படிக்க: உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: நம்பர் ஒன் வீராங்கனையிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார் சிந்து..