Gavaskar on KL Rahul: 'அவர் கர்நாடக அணியை கூட வழிநடத்தியதில்லை... : கே.எல்.ராகுலை விளாசிய கவாஸ்கர் !
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டனாக தற்போது செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல் தொடர்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா-இந்திய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி கடந்த புதன்கிழமை போலண்ட் பார்கில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. இதன்காரணமாக 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போட்டியில் தோல்வி அடைந்தது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனால் இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல் தொடர்பாக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “எதிரணியின் ஒரு ஜோடி சிறப்பாக பேட்டிங் செய்யும் போது பந்துவீசும் அணியின் கேப்டனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பது சகஜம்தான். ஆனால் அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று கேப்டன் விரைவாக முடிவு எடுக்க வேண்டும். முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் அன்று என்ன செய்ய வேண்டும் தெரியாமல் திணறியது போல் இருந்தது.
அணியில் உள்ள இரண்டு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாரை கடைசி 5 ஓவர்களில் பந்துவீச வைத்திருக்க வேண்டும். அப்போது தான் எதிரணி அதிக ஸ்கோர் அடிக்காமல் தடுக்க முடியும். இதை கே.எல்.ராகுல் போக போக கற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்.
கேப்டன்சியை பொறுத்தவரை கே.எல்.ராகுலுக்கு போதிய அனுபவம் இல்லை. ஏனென்றால் அவர் இதற்கு முன்பாக இரண்டு ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். அது தவிர அவர் ரஞ்சி கோப்பை மற்றும் உள்ளூர் ஒருநாள் தொடர்களில் கர்நாடகா அணிக்கு கேப்டனாக இருந்ததில்லை. அப்படி இருக்கும் போது அவர் எப்படி கேப்டன் பதவிக்கு சரியாக தேர்வாக இருக்க முடியும் ” எனக் கூறியுள்ளார்.
கே.எல்.ராகுல் தென்னாப்பிரிக்கா தொடரில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அதன்பின்னர் முதல் ஒருநாள் போட்டியிலும் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் இவருடைய கேப்டன்சி தொடர்பாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 2020மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் 6ஆவது இடத்தையே பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch Video: அதே ஸ்விங்கு.. அதே ஸ்டைலு.. பும்ராவைப்போல பவுலிங்கில் விளாசும் க்யூட் சிறுவன்..