"ஹர்திக் பாண்ட்யா இடம்தான் எனக்கு வேணும்" - ஆர்வமாக தயராகும் சன்ரைசர்ஸ் வீரர்!
சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடிய நிதிஷ் ரெட்டி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடத்திற்கு தயாராகி வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர் மூலமாக பல திறமையான கிரிக்கெட் வீரர்கள் வெளி உலகிற்கு ஒவ்வொரு ஆண்டும் தெரிய வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஏராளமான இந்திய இளம் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஹர்திக் பாண்ட்யா இடம்:
அந்த வகையில், கடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய வீரர் நிதிஷ் ரெட்டி. இவர் சன்ரைசர்ஸ் அணிக்காக நடந்து முடிந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக ஆடும் திறமை கொண்ட நிதிஷ்ரெட்டி ஹைதரபாத் வெற்றி பெற்ற பல போட்டிகளில் முக்கிய வீரராக திகழ்ந்தார்.
ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்ட அவர் கூறியதாவது, எனக்கு 6வது அல்லது 7வது வரிசையில் ஆட வாய்ப்பு கிடைத்தால், நான் ஹர்திக் பாண்ட்யா இடத்தில் ஆடவே விரும்புவேன். என்னை எந்த இடத்தில் களமிறங்கி ஆடச்சொன்னாலும் எனக்கு வசதிதான். ஆனால், நான் தற்போது ஹர்திக் பாண்ட்யா இடத்தில் ஆடுவதற்கு தயாராகி வருகிறேன்.
வாய்ப்புக்கு ஏற்றாற்போல மாற்றம்:
ஒரு வேளை ஆட்டத்தை தொடங்கச் சொன்னால் நான் தொடக்க வீரராக நன்றாக ஆடுவேன். ஆனால், எதிர்காலத்தில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புகள் எனக்கு கிடைக்காது. ஏனென்றால், அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் உள்ளனர். அதனால், எனக்கு எந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அதற்கு ஏற்றாற்போல என்னை மாற்றிக் கொள்கிறேன். உள்ளூர் கிரிக்கெட்டில் அதற்கு தயாராகி வருகிறேன். ரோகித் சர்மா, விராட் மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பதால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நாங்கள் அவர்களின் இடங்களை கைப்பற்ற வேண்டும். என்னுடைய வழிகாட்டுதல் விராட் கோலி ஆவார். அதனால், பூமாவில் நானும் ஒரு விளம்பர தூதராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நிதிஷ் ரெட்டி ஃபெர்பாமென்ஸ்:
நிதிஷ் ரெட்டி கடந்த 2024ம் ஆண்டு கடந்த ஐ.பி.எல். தொடரில் 303 ரன்களை எடுத்தார், 142 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். 21 வயதான நிதிஷ் ரெட்டி 20 டி20 போட்டிகளில் ஆடி 395 ரன்கள் எடுத்துள்ளார். 76 ரன்கள் அதிகபட்சமாக எடுத்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 22 போட்டிகள் ஆடி 4 அரைசதங்களுடன் 403 ரன்கள் எடுத்துள்ளார். 17 முதல்தர கிரிக்கெட்டில் ஆடி 1 சதம், 2 அரைசதங்களுடன் 566 ரன்கள் எடுத்துள்ளார். 22 வயதான நிதிஷ் ரெட்டி இனி வரும் காலங்களில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.