Shubman Gill ODI Record: நவ்ஜோத்சிங் சாதனையை முறியடித்த சுப்மன்கில்..! அப்படி என்ன சாதனை..?
ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 500 ரன்களை கடந்த இந்திய வீரர் நவ்ஜோத்சிங் சித்துவின் சாதனையை சுப்மன்கில் முறியடித்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இந்த போட்டி 40 ஓவர்களாக நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி கிளாசென், டேவில் மில்லர், டி காக்கின் சிறப்பான ஆட்டத்தால் 249 ரன்களை விளாசியது.
இதையடுத்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடி வரும் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் தவான் 4 ரன்களிலும், சுப்மன்கில் 3 ரன்களிலும் அவுட்டாகினர்.
சுப்மன்கில் இந்த போட்டியில் 3 ரன்களில் ஆட்டமிழந்தாலும் இந்த போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விரைவாக 500 ரன்களை கடந்த இந்திய வீரர் என்ற அரிய சாதனையை படைத்துள்ளார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு 499 ரன்களில் இருந்த சுப்மன்கில் இந்த போட்டி மூலம் 500 ரன்களை கடந்தார்.
இந்த பட்டியலில் இதற்கு முன்பு இந்திய அணிக்காக ஆடிய முன்னாள் வீரர் நவ்ஜோத்சிங் சித்து 11 போட்டிகளில் 500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தார். தற்போது அவர் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். மூன்றாவது இடத்தில் 13 போட்டிகளில் 500 ரன்களை கடந்து ஷிகர்தவான் உள்ளார். 500 ரன்களை கடந்த வீரர்களின் நான்காவது இடத்தில் கேதர்ஜாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளனர்.
சுப்மன்கில் 10 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் 3 அரைசதங்களுடன் 502 ரன்களும், 11 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 அரைசதங்களுடன் 579 ரன்களுடனும் எடுத்துள்ளார். 74 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 14 அரைசதங்களுடன் 1900 ரன்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்காக வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் சாதிக்கும் வீரர் என்று முன்னாள் வீரர்களால் கணிக்கப்பட்ட வீரர் சுப்மன்கில் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : IND vs SA 1st ODI LIVE Score: 100 ரன்களை கடந்த இந்தியா..! அதிரடி காட்டுவார்களா சாம்சன் - ஸ்ரேயாஸ் ஜோடி..?
மேலும் படிக்க : IND vs SA, 1st Innings Highlights: ஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா! வெலுத்து வாங்கிய தென் ஆப்ரிக்கா! 250 ரன்கள் இலக்கு