(Source: ECI/ABP News/ABP Majha)
Shreyas Iyer: காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் அய்யரும் விலகல்.. கேப்டன் பாண்ட்யாவா?
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து, இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.
ஸ்ரேயாஸ் விலகல்:
இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து, இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப், ”காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். எங்களிடம் சிறந்த மருத்துவ வசதிகள் உள்ளன, அவை நன்கு பொருத்தப்பட்டுள்ளன. நாங்கள் தேசிய கிரிக்கெட் அகாடமி உடன் ஒருங்கிணைப்பில் உள்ளோம். இந்தத் தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் விலகியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அடுத்து அப்டேட்கள் வழங்கப்படும்” என குறிப்பிட்டார்.
காரணம் என்ன?
முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரேயாஸ் அய்யர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால், அகமதாபாத்தில் நடைபெற்ற தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது, முதுகுப்பகுதியில் மீண்டும் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் போட்டியில் இருந்து பாதியிலேயே விலகினார். இதையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் அவர் முழுமையாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோகித் இல்லை, பாண்ட்யா கேப்டன்:
இதனிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில முக்கிய காரணங்களால் முதல் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தேவின் சகோதரர் குணால் ரித்திகா சஜ்தேவின் திருமணத்தில் கலந்துகொள்வதால் முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
யார் கேப்டன்?
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்ட்யா முதல் முறையாக ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டி20 சர்வதேச போட்டிகளில் மட்டுமே அவர் கேப்டனாக இருந்துள்ளார். மார்ச் 19ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்புகிறார். இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வருகின்ற மார்ச் 22ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணிக்கு இந்த ஒருநாள் தொடரானது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி , முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.