Shreyas Iyer ODI Record: அதுக்குள்ள ஆயிரம்.. அதிரடியாக ஆடும் ஷ்ரேயாஸ் ஐயர்! நச்சுனு ஒரு சாதனை!
ஷ்ரேயாஸ் கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டியில் 6 அரைசதம் அடித்துள்ளார். அவரது இன்னிங்கிஸ் முறையே 71, 65, 70, 53, 7, 80 மற்றும் 54 ரன்களை பதிவு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.
309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்களே எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் ஆனார். அவர் 50 ஓவர் போட்டியில் தனது 25 வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா வெளியேறியதை அடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் அபார அரைசதம் அடித்த இளம் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் அவுட்டான பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
களமிறங்கியது முதல் அதிரடி ஆட்டத்தில் ஈடுப்பட்ட அவர் 57 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 54 ரன்கள் எடுத்து குடாகேஷ் மோதி வீசிய 36வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதேபோல், ஷ்ரேயாஸ் கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் போட்டியில் 6 அரைசதம் அடித்துள்ளார். அவரது இன்னிங்கிஸ் முறையே 71, 65, 70, 53, 7, 80 மற்றும் 54 ரன்களை பதிவு செய்துள்ளார்.
25 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த ஷ்ரேயாஸ் :
இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஆகியோர் ஆடவர் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் ஆவார். தவான் மற்றும் கோஹ்லி இருவரும் ஒரு நாள் போட்டிகளில் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எட்டியுள்ளனர்.
27 வயதான ஷ்ரேயாஸ் ஐயர் 25 இன்னிங்ஸ்களில் 1000 ஒருநாள் ரன்களை எட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் இணைந்துள்ளார். அவர் தனது 25வது ஒருநாள் இன்னிங்ஸிலும் சாதனை படைத்தார்.
ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக மிக வேகமாக 1000 ரன்களை கடந்தவர்கள் :
- விராட் கோலி – 24
- ஷிகர் தவான் – 24
- நவ்ஜோத் சிங் சித்து – 25
- ஷ்ரேயாஸ் ஐயர் – 25
- கேஎல் ராகுல் – 27
- எம்எஸ் தோனி – 29
- அம்பதி ராயுடு – 29
மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் தனது முதல் 25 ODI இன்னிங்ஸில் 10 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் உட்பட பதினொன்று 50+ ஸ்கோர்களை அடித்துள்ளார். இந்திய வீரர்களில் நவ்ஜோத் சிங் சித்து மட்டுமே முதல் 25 ODI இன்னிங்ஸில் ஷ்ரேயாஸ் ஐயரை விட அதிக 50+ ஸ்கோர்களை பதிவு செய்துள்ளார்.
முதல் 25 ODI இன்னிங்ஸில் இந்தியாவுக்காக அதிக 50+ ஸ்கோர்கள்:
- 12: நவ்ஜோத் சித்து
- 11: ஷ்ரேயாஸ் ஐயர்
- 10: விராட் கோலி
- 09: ஷிகர் தவான்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்