Shoib Akhtar on Umran Malik : "உம்ரான் மாலிக் எனது சாதனையை முறியடித்தால் மகிழ்ச்சி"- சோயப் அக்தர்
உலகின் அதிவேகப் பந்துவீச்சு சாதனையான எனது சாதனையை உம்ரான் மாலிக் முறியடித்தால் நான் மகிழ்ச்சியடைவேன் என்று அக்தர் கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் இன்றும் சில வீரர்களுக்கு என்று தனித்துவம் உண்டு. அவர்களில் பாகிஸ்தானின் சோயப் அக்தருக்கு முக்கியப்பங்கு உண்டு. ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சோயப் அக்தர். உலகின் அதிவேகமாக பந்துவீச்சாளராக வலம் வந்தவர்.
இன்று வரையிலும் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அதிவேகமாக பந்துவீசிய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்தே இதுவரை உலகில் அதிவேகமாக வீசப்பட்ட பந்து ஆகும். இன்று வரையிலும் இந்த சாதனை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் உம்ரான் மாலிக் 157 கி.மீ. வேகத்தில் பந்துவீசினார். இதனால், அவர் விரைவில் சோயப் அக்தரின் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சோயப் அக்தர் விளையாட்டு நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “சில நாட்களுக்கு முன்பு எனது அதிவேகமாக வீசிய பந்துவீச்சு சாதனை 20 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருப்பதற்கு நண்பர் ஒருவர் வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால், நான் எனது சாதனையை யாராவது முறியடிக்க வேண்டும் என்று கூறினேன். உம்ரான் மாலிக் எனது சாதனையை முறியடித்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.
அதற்கு அவர் காயம் அடையாமல் இருப்பதை தொடர்ந்து உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும். தற்போது பலராலும் 150 கி.மீ. வேகத்தை கடந்து பந்துவீச முடிய இயலவில்லை. ஆனால், உம்ரான் மாலிக் தொடர்ந்து அந்த வேகத்தில் வீசி வருவதை பார்க்கிறோம். அவர் 100 மைல் வேகத்தில் வீசினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதற்கு அவர் காயங்களில் சிக்கிக்கொள்ளாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்” என்றார்.
இந்திய அணி இனி வருங்காலங்களில் ஆடும் தொடர்களில் உம்ரான் மாலிக் இடம்பெற வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. உம்ரான் மாலிக் இதுவரை இந்த தொடரில் 12 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகின் அதிவேகப்பந்துவீச்சு ஜாம்பவனாக வலம் வந்த சோயப் அக்தர் 155 கி.மீ. வேகம் முதல் 160 கி.மீ. வேகம் வரை பல முறை வீசியுள்ளார். 46 வயதான அக்தர் டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 247 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 19 விக்கெட்டுகளையும், ஐ.பி.எல். போட்டியில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்