Shahrukh khan Knight Riders : பெண்கள் கிரிக்கெட் அணியின் உரிமையாளராக மாறிய ஷாருக்கான்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்
நைட் ரைடர்ஸ் குழுமத்தின் இணை உரிமையாளரான ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் கைப்பற்றி சாதனைப் படைத்தது.
பெண்கள் நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான் தனது அடுத்த ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.
கிரிக்கெட் உலகின் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் ராஜஸ்தான் அணிக்கு நடிகை ஷில்பா ஷெட்டியும், கொல்கத்தா அணிக்கு நடிகர் ஷாருக்கானும், பஞ்சாப் அணிக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் உரிமையாளர்களாக மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
உலகளவில் நைட் ரைடர்ஸ் குழுமத்தின் இணை உரிமையாளரான ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாம்பியன் கைப்பற்றி சாதனைப் படைத்தது. ஆனால் கடந்த ஆண்டு அந்த அணி இறுதிப் போட்டி வரை வந்த நிலையில் எஞ்சிய தொடர்களில் சொதப்பியது. எப்போதும் கொல்கத்தா அணி விளையாடும் போட்டிகளின் மைதானத்தில் ஷாருக்கானை காணலாம்.
This is such a happy moment for all of us at @KKRiders @ADKRiders & of course the lovely set of people at @TKRiders Hope I can make it there to see this live!! https://t.co/IC9Gr96h92
— Shah Rukh Khan (@iamsrk) June 17, 2022
ஆனால் மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதால் அவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் போது நேரில் வரவில்லை. மேலும் பிப்ரவரியில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் கூட மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் ஆகியோர் தான் பங்கேற்றிருந்தனர். கடைசியாக ஷாருக் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. தற்போது தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரோடு பதான் படத்திலும், அட்லி இயக்கத்தில் ஜவான் படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர் ஷாருக்கான் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடப்பாண்டு முதல் முறையாக தொடங்கவிருக்கும் பெண்களுக்கான கரீபியன் பிரிமீயர் லீக்கில் பங்கேற்கும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் உரிமையாளராகி இருப்பதாகவும், ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள இந்த தொடரில் விளையாடுவதைப் நேரடியாக பார்ப்பேன் என்று நம்புவதாகவும் ஷாருக் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் அபுதாபி நைட் ரைடர்ஸ் ஆகியவற்றின் இணை உரிமையாளரான ஷாருக் தற்போது டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் உரிமையாளராக மாறியுள்ளது திரையுலகினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெண்களுக்கான கரீபியன் தொடர் ஆண்களுக்கான கரீபியன் லீக் நடக்கும் நேரத்திலேயே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரின்பாகோ நைட் ரைடர்ஸின் அணி ஆண்களுக்கான கரீபியன் லீக் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக வலம் வருவதோடு மட்டுமல்லாமல் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இம்முறை பெண்கள் தரப்பிலும் இந்த அணி களமிறங்கவுள்ளதால் வரவிருக்கும் கரீபியன் லீக் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்