IND vs ENG Test: "அதுக்குத்தான் இருக்கேன்" ரோகித் சர்மாவுக்கு எதிராக ஸ்கெட்ச் போட்டுள்ள மார்க் வுட்!
ஷார்ட் பிட்ச் பந்துகளை துல்லியமாக ரோகித் சர்மாவை நோக்கி வீசுவேன் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் கூறியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடியது. இந்த ஆண்டில் சொந்த நாட்டில் இந்திய அணி விளையாடிய முதல் தொடர் இது என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு எகிறியது. அதன்படி, இந்திய அணியும் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அதன்படி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. அதன்படி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரானது மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
துல்லியமாக அதை செய்வேன்:
அந்தவகையில் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து பந்து வீச்சை அடித்து நொறுக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகளை அசால்டாக ஃபுல் ஷாட் சிக்ஸராக்குவது ரோகித் சர்மாவின் பலன். கடந்த 2023 உலகக் கோப்பை போட்டி, சென்னை மற்றும் நாக்பூரில் விளையாடிய போட்டிகளில் இதுபோன்ற உத்திகளை பயன்படுத்தி இருந்தார் ரோகித் சர்மா.
இந்நிலையில் தான், ஷார்ட் பிட்ச் பந்துகளை துல்லியமாக ரோகித் சர்மாவை நோக்கி வீசுவேன் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் மார்க் வுட் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மைதானத்திற்கு சென்றதும் அங்குள்ள சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்பதை நான் பார்ப்பேன். பவுன்சர் பந்துகள் அரிதாக வீசப்படும் இந்தியாவில் அதை வீசுவதற்காக நான் இங்கே இருக்கிறேன். குறிப்பாக ரோகித் சர்மா ஷார்ட் பந்துகளை எதிர்கொள்வதில் தரமானவர் என்பதை நான் அறிவேன். அதற்காக அவருக்கு எதிராக நான் பவுன்சர் பந்துகளை வீசக்கூடாது என்று அர்த்தமல்ல. எனவே சரியான நேரத்தில் துல்லியமாக அதை நான் வீசுவேன்” என்று கூறியுள்ளார். இச்சூழலில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் நீங்கள் எப்படி பந்து வீசினாலும் அதை ரோகித் சர்மா லாவகமாக சிக்ஸருக்கு பறக்க விடுவார் என்று கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிராக விக்கெட் கீப்பர் யார்? மனம் திறந்த ராகுல் டிராவிட்
மேலும் படிக்க: India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அஸ்வின் படைக்க இருக்கும் சாதனை! விவரம் உள்ளே!