முதல் வெற்றியை பதிவு செய்த ஆர்சிபி… புள்ளிப்பட்டியலில் மாற்றம்! தகுதி பெற இன்னும் வாய்புள்ளதா?
ஆனாலும் மன உறுதியுடன் விளையாடி முதல் போட்டியை வென்றது ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியை தந்திருக்கும் வேளையில் பாயின்ட்ஸ் டேபிளிலும் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்துள்ளனர்.
நடந்துகொண்டிருக்கும் WPL தொடக்க சீசனில் ஆறு போட்டிகளுக்கு பின் முதல் வெற்றியை ஆர்சிபி அணி ருசித்துள்ள நிலையில் பாயின்ட்ஸ் டேபிளிலும் முன்னேறி உள்ளது.
ஆர்சிபி முதல் வெற்றி
தொடருக்கு முன் மிகவும் பலம் வாய்ந்த அணி என்று புகழப்பட்டதோடு மிகவும் பாரம்பரியமான ஃபிராஞ்சைஸில் இருந்து வந்ததால் மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த அணிதான் ஆர்சிபி. மேலும் ஆண்கள் ஆர்சிபி ரசிகர்கள் அனைவரும் இதற்கும் அதராவளர்கள் ஆனார்கள். ஆனால் தொடரின் துவக்க ஆட்டத்தில் படுதோல்வியில் தொடங்கிய ஆர்சிபி அணி கொஞ்சம் கொஞ்சமாக பெரிய தோல்விகளில் இருந்து மீண்டு சிறிய வித்யாசத்திலான, த்ரில்லிங் தோல்விகளுக்கு வரவே ஐந்து போட்டிகள் ஆனது. தற்போது ஒரு வழியாக முதல் போட்டியை இந்த சீசனில் வென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் UP வாரியர்ஸை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஆனால் இனி வரக்கூடிய போட்டிகளை வென்றாலும் இறுதிபோட்டிக்கு போவது கடினம்தான். ஆனாலும் மன உறுதியுடன் விளையாடி முதல் போட்டியை வென்றது ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியை தந்திருக்கும் வேளையில் பாயின்ட்ஸ் டேபிளிலும் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்துள்ளனர்.
UP வாரியர்ஸ் - ஆர்சிபி
UP வாரியர்ஸ் அணிக்கும் ஆர்சிபிக்கும் இடையே நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியினர் பந்து வீச்சில் ஓரளவுக்கு நன்றாக செயல்பட்டதால் முதலில் பேட்டிங் செய்த UP வாரியர்ஸ் அணியை 135 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. சோஃபி டிவைன் முதல் ஓவரிலேயே UP வாரியர்ஸின் தொடக்க ஆட்டக்காரர்களான தேவிகா வைத்யா மற்றும் அலிசா ஹீலி இருவரையும் வீழ்த்தினார். மேகன் ஷட் அடுத்த ஓவரில் தஹிலா மெக்ராத்தை வெளியேற்ற, எலிஸ் பெர்ரி 16வது ஓவரில் கிரேஸ் ஹாரிஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து போட்டியை முழுவதுமாக ஆர்சிபிக்கு சாதகமாக மாற்றியதால் விக்கெட்டுகள் தொடர்ந்து வந்தன.
மோசமான தொடக்கம்
136 ரன்களை டார்கெட்டாக UP வாரியர்ஸ் நிர்ணயித்த நிலையில், ஸ்ம்ரிதி மந்தனாவின் மோசமான ஆட்டம் இதிலும் தொடர்ந்தது. இதனால் இந்த போட்டியிலும் மோசமான தொடக்கத்தையே தந்த நிலையில் ஆர்சிபி ரசிகர்கள் இந்த போட்டியிலும் தொற்று விடுவோம் என்று 10 ஓவர் வரை நினைத்திருக்கலாம். ஏனெனில், முதல் 10 ஓவர்களில் RCB 66 ரன்களை மட்டுமே சேர்த்து நான்கு விக்கெட்டுகளை இழந்தது. தீப்தி ஷர்மா பந்து வீச்சில் ஸ்ம்ரிதி டக் அவுட் ஆனார். அதன் பிறகு வந்த கனிகா அஹுஜா 30 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார். அதே சமயம் ரிச்சா கோஷ் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார். இவர்கள் இவரால் மீண்டு வந்த ஆர்சிபி அணி 18 ஓவர்களில் வேற்றி இலக்கை அடைந்தது.
புள்ளிப்பட்டியல் மாற்றம் என்ன?
முதல் வெற்றியை ஆர்சிபி பதிவு செய்துள்ள நிலையில், குஜராத் ஜெயண்ட்ஸை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்திற்கு வந்துள்ளது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் ஒரே ஒரு போட்டியை வென்றிருந்தாலும் ரன் ரேட்டில் ஆர்சிபியை விட பரிதாபகரமான நிலையில் உள்ளதால் கடைசி இடத்தில் உள்ளார்கள். மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் UP வாரியர்ஸ் அணி தோற்றால் மட்டுமே ஆர்சிபி முன்னேற வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் ஆர்சிபி வெல்ல வேண்டும். இந்த போட்டியில் வென்றிருந்தால் UP வாரியர்ஸ் அணி ஒருவேளை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதி ஆகியிருக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் அசுர ஃபார்மில் இருப்பதால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று தெரிகிறது.