Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
வெற்றிக் கொண்டாட்டத்திற்கு மத்தியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
2024 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில், பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று பர்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களம் கண்ட தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.
வெற்றிக் கொண்டாட்டத்திற்கு மத்தியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதேசமயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. கோப்பையை ராகுல் டிராவிட் கைகளில் அலங்கரித்து இந்திய வீரர்கள் கொண்டாடினர். இந்நிலையில் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட், “ஒரு வீரராக, நான் சிறந்த பங்களிப்பை கொடுத்தும் கோப்பையை வெல்லும் அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் போனது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் நான் இந்த கோப்பையை கைகளில் ஏந்த காரணமான வீரர்கள் அளித்த பங்களிப்பை உணரும்போது அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இது ஒரு சிறந்த பயணம்.
டி20 உலகக்கோப்பைக்காக 2 ஆண்டுகள் பயணப்பட்டோம். இந்திய அணியை கட்டமைக்க தேவைப்பட்ட வீரர்கள் மற்றும் அவர்களுடைய திறன்கள் எல்லாம் சரியாக கிடைத்தது. 2021ல் விவாதமாக தொடங்கிய பயணம் சாதாரணமானது அல்ல” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து, கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதை பற்றி பேசுகையில், “ஒரு நபராக அவரை நான் மிஸ் செய்வேன்.. அவர் எப்படிப்பட்டவர், அவர் எனக்கு காட்டிய மரியாதை, என்னை கவர்ந்தது. அணிக்காக அவர் கொண்டிருந்த அக்கறை மற்றும் அர்ப்பணிப்பு, அவர் செலவழித்த ஆற்றல் மற்றும் என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் மிஸ் செய்யக்கூடிய அவர் இருப்பார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியில் இன்றைய இளம் வீரர்கள் அற்புதமான திறமைகளோடு உள்ளனர். அவர்களின் ஆற்றலும் நம்பிக்கையும் இந்த நேரத்தில் வேறொரு லெவலில் உள்ளது. அடுத்த 5-6 வருடங்களில் இந்தியா பல கோப்பைகளை வெல்லும்” என தெரிவித்துள்ளார்.