Ashwin: தோனி, ரோகித் கூட இதை செய்யல.. மாஸ் காட்டிய இந்திய மகளிர் அணி - பாராட்டி தள்ளிய அஸ்வின்
Ashwin Cricket News: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி செய்யாததை, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மகளிர் அணி செய்து காட்டியுள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.

Ashwin Cricket News: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் கவுரவிக்கப்பட்டதை, ரவிச்சந்திரன் அஸ்வின் வரவேற்றுள்ளார்.
இந்திய மகளிர் அணியை பாராட்டிய அஸ்வின்:
இந்திய மகளிர் அணி, ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை முதல்முறையாக வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இதற்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் இந்திய ஆடவர் அணி ஒருபோதும் செய்யாததை, மகளிர் அணி செய்திருப்பதாகவும், முன்னாள் வீரர்களிடம் கோப்பையை வழங்கிய செயல் பாராட்டத்தக்கது என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின் வரவேற்றுள்ளார். அவரது கருத்து இணையத்தில் தீவிரமான விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இந்திய மகளிர் அணி தாங்கள் வென்ற கோப்பையை முன்னாள் ஜாம்பவான்களான மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி மற்றும் அன்ஜும் சோப்ரா ஆகியோர் கையில் கொடுத்து கவுரவித்தனர். இந்திய மகளிர் அணி தற்போது கண்டுள்ள மிகப்பெரிய வளர்ச்சிக்கு வித்திட்ட, அந்த 3 பேரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் போது வர்ணனையாளர்களாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு, கைகளில் கோப்பையை ஏந்தியதும் அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அஸ்வின் சொன்னது என்ன?
உலகக் கோப்பை வெற்றி தொடர்பாக தனது யூட்யூப் சேனலில் பேசிய அஸ்வின், “இந்திய அணியின் இந்த வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 2016-17 ஆம் ஆண்டில், ஹர்மன்ப்ரீத் கவுர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். அதன் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் பெற்ற தோல்வி மனவேதனையை ஏற்படுத்தியது. ஜூலன் கோஸ்வாமி மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் அந்த உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடினர். இந்நிலையில் வெற்றி பெற்றதும் இந்திய அணி வீராங்கனைகள் மிதாலி ராஜிடம் கோப்பையை வழங்கினார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள்? அதற்காக நான் உண்மையில் இந்திய மகளிர் அணிக்கு என் தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்துகிறேன். இந்திய ஆண்கள் அணி இதுபோன்ற ஒன்றை ஒருபோதும் செய்ததில்லை.
சில நேரங்களில் ஊடகங்கள் முன், நாம் சில விஷயங்களைச் சொல்கிறோம்.ஏனென்றால் அதுதான் ஊடகப் போக்கு. இந்த நபர் அதைச் செய்தார் அல்லது அந்த நபர் அதைச் செய்தார் என்கிறோம். ஆனால் முந்தைய தலைமுறைக்கு உண்மையான பாராட்டு தெரிவிக்கும் எவரையும் நான் அடிக்கடி பார்த்ததில்லை. மாறாக என் தலைமுறையின் அணி நன்றாக இருக்கிறது, உங்கள் தலைமுறையின் அணி அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது பற்றியதாக மாறும். இதுபோன்ற விவாதங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்" என்று அஸ்வின் பேசினார்.
அஸ்வினுக்கு குவியும் பாராட்டு:
அஷ்வினின் வார்த்தைகள் அவரது நேர்மை மற்றும் துணிச்சலான பேச்சுக்காக தனித்து நின்று ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. சிலர் மட்டுமே செய்யும் ஒரு விஷயத்தை அவர் மிகவும் பகிரங்கமாக பேசியுள்ளார். ஆண்கள் அணி பெரும்பாலும் தங்கள் முன்னோடிகளை மதிப்பது பற்றிப் பேசினாலும், பெண்கள் அணி உண்மையிலேயே அதை செய்து காட்டியுள்ளது. பேச்சுகளோ அல்லது பிரமாண்டமான சைகைகளோ இல்லை, தங்களுக்கு வழி வகுத்த ஜாம்பவான்களுடன் சேர்ந்து கொண்டாடியபோது உண்மையான நன்றியுணர்வு மட்டுமே காட்டியுள்ளதாக ரசிகர்களும் இந்திய மகளிர் அணியை கொண்டாடி வருகின்றனர்.



















