ICC WorldCup Pakistan: ஒருவழியா ஒத்துக்கிட்ட பாகிஸ்தான்..! உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தியா வர அனுமதி
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியாவிற்கு வருகை தர, பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசியின் ஒருநாள் உலக்கோப்பை தொடரில் பங்கேற்க, இந்தியா வருவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் அனுமதி:
இதுதொடர்பான அறிக்கையில் “விளையாட்டை அரசியலுடன் கலக்கக் கூடாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே, வரவிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இல் பங்கேற்க தனது கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் நிலை சர்வதேச விளையாட்டு தொடர்பான கடமைகளை நிறைவேற்றுவதில் தடையாக இருக்கக்கூடாது என்று பாகிஸ்தான் நம்புகிறது.
ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியா மறுத்திருந்தாலும், நாங்கள் தற்போது எடுத்துள்ள இந்த முடிவு பாகிஸ்தானின் ஆக்கபூர்வமான மற்றும் பொறுப்பான அணுகுமுறையைக் காட்டுகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தனது கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்து வருகிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இந்திய பயணத்தின் போது முழு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pakistan has decided to send its Cricket Team to India to participate in the upcoming ICC Cricket World Cup 2023: Foreign Ministry of Pakistan pic.twitter.com/Rzg55Lv0ib
— ANI (@ANI) August 6, 2023
உலகக்கோப்பை தொடர்:
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முழு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது. அதன்படி, உலகக் கோப்பையின் முதல் போட்டி அக்டோபர் 5ம் தேதியும், இறுதிப்போட்டி நவம்பர் 19ம் தேதியும் நடைபெற இருக்கிறது. சென்னை, ஐதராபாத், அகமதாபாத், தர்மசாலா, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா என மொத்தம் 10 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.
பாகிஸ்தானின் போட்டி விவரங்கள்:
இந்த தொடரில், ஐதராபாத்தில் அக்டோபர் 6ம் தேதி பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் போட்டியில் விளையாட உள்ளது. தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் லீக் போட்டிகளில் விளையாட உள்ள பாகிஸ்தான் அணி, அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.
முடிவுக்கு வந்த இழுபறி:
பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசியக்கோப்பையில், பங்கேற்க இந்திய மறுப்பு தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக தற்போது அந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. குறிப்பாக இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையிலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது என பாகிஸ்தான் அணி தெரிவித்து வந்தது. அதோடு, குறிப்பிட்ட சில மைதானங்களில் விளையாட முடியாது எனவும் அறிவிக்கப்பட்டது. அதையும் மீறி தான், இந்திய கிரிக்கெட் சம்மேளனன், நடப்பாண்டு உலகக்கோப்பை தொடருக்கான பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்த பாதுகாப்புக் குழு இந்தியா வருகை தந்து, அந்த அணி வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். அதனடிப்படையில் தற்போது, உலக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா செல்ல பாகிஸ்தான் அணிக்கு, அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.