Cricket News : விராட்கோலி விலகி நிற்கிறார்..! கே.எல்.ராகுல் கேப்டனுக்கு தயாராகவில்லை..! இந்திய அணிக்குள் பிளவு..! பாகிஸ்தான் வீரர் கடும் அதிருப்தி
இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், விராட்கோலி அணியில் இருந்து ஒதுங்கி நிற்பதாகவும், கே.எல்.ராகுல் கேப்டன்சிக்கு தயாராகவில்லை என்றும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணியின் ஆட்டம் இந்திய ரசிகர்கள் பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு கோலி கேப்டன்சியை ராஜினாமா செய்தவுடன் ஒருநாள் தொடர் தொடங்கியதால் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கேப்டனாக கே.எல்.ராகுல் தனது கேரியரை தொடங்கிய முதல் இரண்டு போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துள்ளது. கடந்த போட்டியில் இந்திய வீரர்கள் மிகவும் பொறுப்பின்றி ஆடி ஆட்டமிழந்தனர். முன்னாள் கேப்டன் விராட்கோலி டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். இந்த நிலையில், இந்தியாவின் தொடர் தோல்வி குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தனது யூ டியூப் சேனலில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அவர் தனது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது, “ கே.எல்.ராகுல் கேப்டன்சியில் ஒரு தீவிரம் இல்லை. விராட்கோலியை பார்ப்பதற்கு அவர் அணியில் இருந்து ஒதுங்கி இருப்புது போலவும், அணியினருடன் தொடர்பில் இல்லாதது போலவும் உள்ளது. அவர் அதிகமாக நெருக்கம் காட்டவில்லை. மேலும், அவர் கேப்டனுக்கு தகுந்த அறிவுரைகளையும் வழங்கவில்லை. ஒரு கிரிக்கெட் வீரரின் மனதிற்குள் என்ன தோன்றுகிறது என்பது அவரது உடல்மொழி மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும்.
இந்திய அணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விராட்கோலி கேப்டனாக பொறுப்பு வகித்தபோது இந்திய அணியிடம் இருந்து கொண்டு வந்த தீவிரத்தை தற்போதைய இந்திய அணியிடம் காணமுடியவில்லை. கே.எல்.ராகுல் இன்னும் கேப்டன் பொறுப்பிற்கு தயாராகவில்லை. ரோகித்சர்மா கண்டிப்பாக கேப்டனாக திரும்ப வர வேண்டும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
டேனிஷ் கனேரியா கூறியதுபோல கடந்த போட்டியில் மார்க்ரம் வீசிய மிகவும் லேசான பந்தில் பாய்ண்ட் திசையில் விராட்கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த விதம் அனைவருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. தொடர் தோல்விகளால் இந்திய அணி மீதும், புதிய கேப்டன் கே.எல்.ராகுல் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இரு அணிகளுக்குமான கடைசி ஒருநாள் போட்டி வரும் 23-ந் தேதி கேப்டவுனில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை இழந்தாலும், ஒயிட்வாஷ் ஆகாமால் நாடு திரும்பலாம்.
மேலும் படிக்க : IPL 2022 Auction: அகமதாபாத், லக்னோ அணிகள் தேர்ந்தெடுத்த வீரர்கள் அறிவிப்பு... கேப்டன்கள் யார்? - முழு விவரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்