வேகம் எல்லாம் ஒன்னுக்கும் ஆகாது..! லைன், லென்த்தான் முக்கியம்..! உம்ரான் மாலிக்கை விமர்சித்த பாக். பந்துவீச்சாளர்..!
லைன் மற்றும் லென்த் இல்லாவிட்டால் வேகம் எதற்கும் உதவாது என்று உம்ரான் மாலிக் பந்துவீச்சை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி விமர்சித்துள்ளார்.
டாடா ஐ.பி.எல். 15வது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த சீசனில் இளம் வீரர்கள் பலரும் அபாரமாக ஆடினர். இந்தியாவிற்காக ஆடாத வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அனைவராலும் கவனம் பெற்றார். அவர் 156 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் வியக்க வைத்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி உம்ரான் மாலிக் பற்றி கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2021ம் ஆண்டிற்கான கார்பீல்ட் சோபர்ஸ் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின்ஷா அப்ரிடியிடம் உம்ரான் மாலிக் மற்றும் பெர்குசன் வேகப்பந்துவீச்சு பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ உங்கள் பந்துவீச்சில் லைன் மற்றும் லென்த் இல்லாவிட்டால் வேகம் உங்களுக்கு உதவாது.” என்றார். அவரது கருத்துக்கு பலர் அதிருப்தியையும், சிலர் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். மேலும், அவரிடம் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பற்றி கேட்கப்பட்டபோது, “ காலநிலை வெப்பமாக உள்ளது. ஆனாலும், நாம் நல்ல கிரிக்கெட்டை முன்னோக்கி ஆட உள்ளோம். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. ஆனால், தொழில்முறை வீரராக இதற்கு தயாராக இருக்க வேண்டும்.” என்று கூறினார்.
பாகிஸ்தானின் முக்கிய பந்துவீச்சாளராக வலம் வரும் 22 வயதே ஆன ஷாகின் அப்ரிடி 24 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 95 விக்கெட்டுகளையும், 30 ஒருநாள் போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளையும், 40 டி20 போட்டிகளில் ஆடி 47 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். உம்ரான் மாலிக் கடந்த சீசனில் மட்டும் 14 போட்டிகளில் ஆடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 157 கிலோமீட்டர் வேகத்தில் வீசி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் சுமார் 5 முறைக்கும் மேல் உம்ரான் மாலிக் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி அசத்தியுள்ளார்.
உம்ரான் மாலிக்கின் சிறப்பான செயல்பாடு காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்று நம்பப்படுகிறது. உம்ரான் மாலிக் இர்பான் பதானால் கண்டெடுக்கப்பட்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூலமாக வெளி உலகிற்கு நன்று பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உம்ரான் மாலிக் பந்துவீச்சை ஷாகின் அப்ரிடி விமர்சித்துள்ள சூழலில், தன்னுடைய முறியடிக்கப்படாத அதிவேக பந்துவீச்சு சாதனையை உம்ரான் மாலிக் முறியடிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் சோயப் அக்தர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்