ENGvsSA: "பார்ட்மேன் தற்கொலை செய்து கொண்டார்" - தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரை சாடிய முன்னாள் வீரர்
Ottneil Baartman: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக பந்துவீசிய, தென்னாப்ரிக்க வீரர் ஓட்னெய்ல் பார்ட்மேனை முன்னாள் வீரர் கடுமையாக சாடினார்.
Ottneil Baartman: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்கா அணி, போராடி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரன்களை வாரி வழங்கிய பார்ட்மென்:
உலகக் கோப்பை டி20 போட்டியில் சூப்பர் 8 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பரிக்கா அணி 163 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் எய்டன் மார்க்ரம் பந்தை ஒட்னெய்ல் பார்ட்மேனிடம் ஒப்படைக்கும் முன்பு வரை, போட்டி முழுவதும் தென்னாப்ரிக்கா வசமே இருந்தது. ஆனால், பார்ட்மேன் வீசிய அந்த ஒரு ஓவர் போட்டியை இங்கிலாந்து பக்கமாக திருப்பியது. காரணம் போட்டியின் மிக மோசமான ஓவரில் ஒன்றாக அது மாறியது. ஒரு ஓவரில் மட்டும் ஐந்து ஃபுல் டாஸ்களை வீசிய பார்ட்மேன், 21 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
லிவிங்ஸ்டோன் முயற்சி தோல்வி:
லியாம் லிவிங்ஸ்டோன் இங்கிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல, பார்ட்மேன் வீசிய ஓவரில் அதிரடி காட்டி கடுமையாக போராடினார். வெறும் 17 பந்துகளில் 33 ரன்களை குவித்தார். ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. காரணம் மார்கோ ஜான்சன், காகிசோ ரபாடா மற்றும் நார்ட்ஜே ஆகியோர் இறுதி மூன்று ஓவர்களில், துல்லியமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றது. 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 கட்டத்தில் தென்னாப்பிரிக்கா தொடர்ந்து பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும். தொடக்கப் போட்டியில் அமெரிக்காவை தோற்கடித்த பிறகு, நடப்பு உலக சாம்பியனுக்கு எதிரான வெற்றியால் மார்க்ராம் தலைமையிலான அணி அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
பார்ட்மேனை சாடிய நவ்ஜோத் சிங் சித்து:
இதற்கிடையில், முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து, மோசமான பந்துவீச்சிற்காக, பார்ட்மேனை கடுமையாக சாடினார். அவர் தனது முதல் இரண்டு ஓவர்களில் வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஆனால் கடைசியாக வீசிய ஆறு பந்துகளுக்குப் பிறகு அவர் விட்டுக் கொடுத்த ரன்கள் மொத்தமாக 27 ரன்களை எட்டியிருந்தது என ஆவேசமாக விமர்சித்தார்.
”தற்கொலை செய்து கொண்டார்”
“இது தற்கொலை செய்து கொள்வது போன்றது. இங்கிலாந்துக்கு எதிராக ஒட்னீல் பார்ட்மேன் இன்று தற்கொலை செய்து கொண்டார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து கிட்டதட்ட தோற்றிருந்த நிலையில், அவர்களை பார்ட்மேன் மீண்டும் வெற்றிகோட்டை நெருங்கச் செய்தார். அவரால் ஆடுகளத்தில் பந்தை தரையிறக்க முடியவில்லை. பந்து வீச்சாளராக உங்களால் செய்ய முடியாதா?. Ottneil பவுண்டரிகளை விட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். ஃபுல் டாஸ்ஸுக்குப் பிறகு மீண்டும் மீண்டும் அவர் ஏன் ஃபுல் டாஸ் வீசினார் என்று எனக்குப் புரியவில்லை. லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர், ரன்களை சேர்க்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தனர். பார்ட்மேன் ஓவர்தான் அவர்களுக்கு வாய்ப்பளித்தது" என்று நவ்ஜோத் சிங் சித்து சாடினார்.