Team India Openers: இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால ஓப்பனர்கள் இவர்கள் தானா?
ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் அதிக கவனத்தை ஈர்த்த வீரர்கள் இவர்களே. இந்த இருவரும்தான் இப்போது சையத் முஸ்தாக் அலி தொடரிலும் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
சையத் முஸ்தாக் அலி தொடர் நவம்பர் 4 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறு வருகிறது. 38 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் பல இளம் வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இரண்டு பேர் தங்களின் பெயரை மீண்டும் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்யும் வகையில் பெர்ஃபார்ம் செய்து வருகின்றனர். அந்த இருவருமே இந்திய அணியின் ஓப்பனர்களாக மாறவும் அதிக வாய்ப்பிருக்கிறது. யார் அந்த இருவர்?
ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் அதிக கவனத்தை ஈர்த்த வீரர்கள் இவர்களே. இந்த இருவரும்தான் இப்போது சையத் முஸ்தாக் அலி தொடரிலும் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் அந்த அணியின் ஓப்பனராகவும் களமிறங்கி வரும் ருத்துராஜ் கெய்க்வாட். இந்த சீசனில் இதுவரை ஆடியிருக்கும் இரண்டு போட்டிகளிலுமே அரைசதம் அடித்திருக்கிறார். முதல் போட்டியிலேயே தமிழக அணிக்கு எதிராக சிறப்பாக ஆடியிருந்தார். இந்த போட்டியில் மகாராஷ்டிரா அணி 168 ரன்களை சேஸ் செய்தது. ஓப்பனிங் இறங்கிய ருத்துராஜ் அசத்தலாக 30 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 170. ஆனாலும் இந்த போட்டியை மகாராஷ்டிரா அணியால் வென்றிருக்க முடியவில்லை. ருத்துராஜுடன் கேதார் ஜாதவ் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த போது ஸ்பின்னர்களுக்கு எதிராக ருத்துராஜுக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காமல், இரண்டு மூன்று ஓவர்கள் ஜாதவே நின்று மந்தமாக ஆடி ரன்ரேட் அழுத்தத்தை உயர்த்திவிட்டார். ருத்துராஜின் விக்கெட்டிற்கு இந்த அழுத்தமும் பெரிய காரணமாக அமைந்தது. ஜாதவ் எதிர்கொண்டிருந்த அந்த 2-3 ஓவர்கள் சரியாக அமைந்திருந்தால் ருத்துராஜ் இன்னுமே பெரிய இன்னிங்ஸை ஆடியிருக்க முடியும்.
ஆனால், அந்த குறையை அடுத்த போட்டியிலேயே ருத்துராஜ் தீர்த்து வைத்தார். பஞ்சாபுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 138 ரன்களை மகாராஷ்டிரா சேஸ் செய்தது. இந்த டார்கெட்டை மகாராஷ்டிரா அணி 17.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இந்த போட்டியிலும் அதிக ரன்களை அடித்தவர் ருத்துராஜ் கெய்க்வாட்டே. 54 பந்துகளில் 80 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 148.15. ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாக இது அமைந்திருந்தது.
மத்திய பிரதேச அணிக்காக வெங்கடேஷ் ஐயர் ஆடிக்கொண்டிருக்கிறார். பேட்டிங்கில் ஓப்பனராகவும் பௌலிங்கில் மிதவேக பந்துவீச்சாளராகவும் கலக்கி வருகிறார். அசாமுக்கு எதிரான முதல் போட்டியில் 2 ஓவர்களை வீசி 13 ரன்களை மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார். அதுவும் அசாம் அணியின் ஓப்பனரான பல்லவ் குமார் தாஸ் என்பவரின் முக்கியமான விக்கெட். மத்திய பிரதேச அணி 104 ரன்களை சேஸ் செய்த போது அதிரடியாக 23 பந்துகளில் 37 ரன்களை அடித்திருந்தார்.
இரயில்வேஸுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 3 ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பேட்டிங்கிலும் 98 ரன்களை சேஸ் செய்த போது 41 பந்துகளில் 50 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.
ருத்துராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் இருவருமே இளம் வீரர்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி சாம்பியன் ஆனதற்கும் கொல்கத்தா இறுதிப்போட்டி வரை முன்னேறியதற்கும் இருவருமே மிகப்பெரிய காரணமாக இருந்தனர். இப்போது சையத் முஸ்தாக் அலி தொடரிலும் அசத்தி வருகின்றனர். இந்திய அணியும் அடுத்தக்கட்ட இளம் வீரர்களுக்கான தேடலில் இறங்கும் சூழலில் இருக்கிறது. ரோஹித்திற்கு அடுத்த ஓப்பனர் யார்? என தெரிய வேண்டும். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? இப்படியான கேள்விகள் சூழும் சமயத்தில் இந்த இருவரும் இப்படி அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீக்கிரமே இருவருக்கும் இந்திய அணிக்கான அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.