On this day in 2017: மூன்றாவது இரட்டை சதம்.. 7-ஆம் ஆண்டு திருமண நாள்.. ரோகித் சர்மாவின் இரட்டை கொண்டாட்டம்!
கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகா முன்பு இலங்கை அணிக்கு எதிரான தனது மூன்றாவது இரட்டை சதம் அடித்து, தனது கையில் இருந்த மோதிரத்தை முத்தமிட்டார்.
ஒரு காலத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் அடிப்பது என்பது யாருக்கும் எட்டாத கனியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்கா அணிக்கு கடந்த 2010ம் ஆண்டு முதல் முறையாக இரட்டை சதம் அடித்தார். அதைதொடர்ந்து, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011 ம் ஆண்டு 219 ரன்கள் குவித்தார்.
அதன்பிறகு, இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்களை அடித்தார். ஹிட்மேன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு முறையும், இலங்கைக்கு எதிராக இரண்டு முறையும் இரட்டை சதம் அடித்தார். டிசம்பர் 13, 2017 அன்று, மொஹாலியில் இன்று ஒருநாள் போட்டிகளில் ரோஹித் தனது மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இன்று தனது 7வது திருமண நாளை கொண்டாடுகிறார். அவர் 2015 ம் ஆண்டு ரித்திகாவை மணந்தார். திருமண இரண்டாம் ஆண்டு விழாவில், இதுவரை எந்த கிரிக்கெட் வீரரும் செய்ய முடியாத சாதனையை (ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்) ரோகித் செய்தார்.
🗓️ #OnThisDay in 2⃣0⃣1⃣7⃣ @ImRo45 scored his third ODI double century, registering 208 against Sri Lanka 🔥🔥
— BCCI (@BCCI) December 13, 2022
His glorious knock consisted of 1⃣3⃣ fours & 1⃣2⃣ sixes 💥💥#TeamIndia pic.twitter.com/QfLEqroT6K
ரோகித் சர்மாவை பொறுத்தவரை, டிசம்பர் 13 ம் தேதி சிறந்த நாளாக அமைந்தது. 2015ம் டிசம்பர் 13ம் தேதி ரோகித் சர்மாவும், ரித்திகாவும் திருமணம் செய்து கொண்டனர். அதே நாளில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2017 ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தனது மனைவி ரித்திகா முன்பு இலங்கை அணிக்கு எதிரான தனது மூன்றாவது இரட்டை சதம் அடித்து, தனது கையில் இருந்த மோதிரத்தை முத்தமிட்டார்.
இலங்கை அபார தோல்வி:
கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் இழந்தது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசரா பெரேரா பீல்டிங் செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா, இலங்கை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். அவருக்கு துணையாக களமிறங்குய ஷிகர் தவான் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்கள் குவித்து 46வது ஓவரின் மூன்றாவது பந்தில் வெளியேறினார். அவருக்குப் பின் வந்த மகேந்திர சிங் தோனியால் ஐந்து பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 50வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா 8 ரன்களில் வெளியேற, ரோகித் சர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 153 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 208 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 392 ரன்கள் குவித்து இருந்தது.
393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது. இலங்கையின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆட்டமிழக்காமல் 111 ரன்களை எடுத்தார். 132 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசினார். இந்திய தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.