Sachin Desert Storm: அதுக்குள்ள 25 வருஷமா!.. பாலைவனத்துல ஆஸ்திரேலியாவை வச்சு செய்த சச்சின்.. அடங்காத கொண்டாட்டம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சச்சின் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெறச் செய்து இன்றுடன் 25 வருடங்களை ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சச்சின் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றி பெறச் செய்து இன்றுடன் 25 வருடங்களை ஆனதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நினைவு கூறியுள்ளது.
கிரிக்கெட்டில் அதிரடி:
கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியான பேட்டிங்கால் சிக்சர்கள் அடித்து நொறுக்கப்படுவது இன்றைய கால கட்டத்தில் சர்வசாதாரணமாக மாறி விட்டது. ஐபிஎல் போன்ற தொடர்களில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்சருக்கும் பணம் கொடுக்கும் அளவிற்கு அது வியாபாரமாக வளர்ந்துள்ளது. ஆனால், தற்போது இருக்கும் சூழலை போன்றது அல்ல, 25 வருடங்களுக்கு முன்பான கிரிக்கெட் சூழல். அந்த காலகட்டங்களில் சிக்சர் அடிப்பது என்பது மிகவும் அரிதானதுதான்.
”பாலைவனப் புயல்”
ஆனால், மைதானத்தில் இருந்த அத்தனை பேரையும் ஆச்சரியத்திற்கு ஆளாக்கும் வகையில், சரியாக 25 வருடங்களுக்கு முன்பாக ஷார்ஜாவில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சச்சின். அதுவும் திடீரென வீசிய பாலைவன புயலையும் கடந்து நடந்த போட்டியில், புயலாக செயல்பட்டு இந்திய அணிக்கான வெற்றி பெற்ற தர போராடினார் சச்சின். இன்றளவும் சச்சினின் இந்த இன்னிங்ஸ் பாலைவனப் புயல் என வர்ணிக்கப்படுகிறது.
#WATCH | Mumbai: Sachin Tendulkar cuts a cake ahead of his 50th birthday, at an event on the 25 years of his historic 'Desert Storm' innings in Sharjah against Australia.
— ANI (@ANI) April 22, 2023
He will celebrate his 50th birthday on 24th April. pic.twitter.com/gh6BJ1qxXd
ரசிகர்களுடன் கொண்டாட்டம்:
இந்த அபாரமான இன்னிங்ஸை சச்சின் விளையாடி இன்றுடன் 25 வருடங்கள் ஆகிறது. இதையொட்டி, மும்பையில் தனது ரசிகர்கள் உடன் சேர்ந்து சச்சின் டெண்டுல்கர் கேக் வெட்டினார். அப்போது ரசிகர்கள் ”சச்சின் சச்சின்” என முழக்கமிட்டு அவரை உற்சாகப்படுத்தினார். அதற்கு சச்சின் தனது நன்றிகளை தெரிவித்தார்.
முத்தரப்பு தொடர்:
1998ம் ஆண்டு இந்தியா , ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரபு தொடர் நடைபெற்றது. தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 284 ரன்களை சேர்த்தது.
இந்திய அணி பேட்டிங்:
இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், கங்குலி 17 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்தை நாலாபுறமும் சிதறடித்தார். இதனால் 22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் அடித்து சேர்த்து இருந்தபோது மைதானத்தில் புழுதிப்புயல் வீசியது. இதனால் போட்டி 25 நிமிடங்கள் வரை பாதிக்கப்பட்டது.
சச்சின் ஆடிய புயல் ஆட்டம்:
புழுதிப்புயல் ஓய்ந்ததும் இந்திய அணிக்கான இலக்கு 46 ஓவர்களில் 276 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிறகு சச்சினின் உண்மையான புயல் ஆட்டம் தொடங்கியது. மைக்கேல் காஸ்ப்ரோவிச் போன்றோரின் பந்துவீச்சை சச்சின் சிக்சருக்கு பறக்கவிட்டதை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. முடிவில் 131 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் உட்பட 143 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால், அவரை தொடர்ந்து வந்த சக வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், அந்த போட்டியில் இந்திய அணி 250 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. போட்டியில் தோற்று இருந்தாலும் சச்சின் அன்று ஆடியது கிரிக்கெட் வரலாற்றில் எந்நாளும் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.