ODI World Cup 2023:டேரில் மிட்செலுக்கு மைதானத்திலே நன்றி சொன்ன நெதர்லாந்து பவுலர் - காரணம் இதுதான்!
நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர் வான் மீகெரென் நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்லுக்கு நன்றி சொன்ன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 வரை இந்தியாவின் பத்து நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 48 லீக் போட்டிகள் நடைபெறும். அந்தவகையில், இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
மிட்செலுக்கு நன்றி சொன்ன நியூசிலாந்து வீரர்:
6 வது லீக் போட்டி நேற்று (அக்டோபர் 9) ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் தற்போது முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியும், எட்டாவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணியும் விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் தான் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன்படி, நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல்லுக்கு நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர் பால் வான் மீகெரென் நன்றி தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர். அதில் இருவரும் நெதர்லாந்து அணியினரின் பந்து வீச்சை நொறுக்கினர்.
அதில் வில் யங் 80 பந்துகளில், 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 70 ரன்கள் விளாசினார். பின்னர், வான் மீகெரென் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தி நடையைக் கட்டினார். அதேபோல் டெவோன் கான்வே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட 32 ரன்கள் எடுத்து வான் டெர் மெர்வே பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் களம் இறங்கிய ரச்சின் ரவீந்திரா 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுபுறம் டேரில் மிட்செல் தனது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.
நன்றி சொன்ன வான் மீகெரென்:
அப்போது 39 ஓவரை வீசுவதற்காக நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர் வான் மீகெரென் வந்தார். அவர் வீசிய இரண்டாவது பந்தை நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் ஓங்கி அடித்தார். அந்த பந்து ஸ்டம்பில் அடித்து கீழே விழுந்தது. அதை பார்த்த வான் மீகெரென் அந்த பந்து தன் மீது படாமல் ஸ்டம்பில் பட்டதற்காக டேரில் மிட்செல்லுக்கு நன்றி சொன்னார்.
ரசிகர்களின் சிரிப்பலை:
இதை பார்த்ததும் மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. அதோடு இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 322 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணியை 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றது.
மேலும் படிக்க: ODI World Cup 2023: வில் யங், மிட்செல், லாதம் அபாரம்; நெதர்லாந்து அணிக்கு 323 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: ODI World Cup 2023: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு காவி ஜெர்சியா? பி.சி.சி.ஐ. சொன்ன பதில் இதுதான்!