Pakistan ODI WC Jersey: 'இந்தியா' பெயருடன் வெளியான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி.. காரணம் தெரியுமா?
உலகக்கோப்பைக்கு முன்னர் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் விளையாடவுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் இருந்தாலும் இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தயாராவதை விட போட்டிகளைக் காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவரும் வகையில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு முதல் ஐசிசி மற்றும் பிசிசிஐ என இரண்டு கிரிக்கெட் வாரியமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு ரசிகர்களை உலகக்கோப்பை தொடர் குறித்து முணுமுணுக்க வைத்துக்கொண்டே உள்ளனர்.
ஏற்கனவே ஐசிசி உலகக்கோப்பையை விண்வெளியில் அறிமுகம் செய்தது, இதையடுத்து பிசிசிஐ இம்முறை உலகக்கோப்பை போட்டிகள் நடத்தத்திட்டமிட்டுள்ள 12 மைதானங்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் மேம்பாட்டு செலவிற்காக ஒதுக்கியது. இதற்கான பணிகள் 12 மைதானங்களிலும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு உள்ளது. இதனால் ஐபிஎல் தொடருக்குப் பின்னர் தொடங்கி ஆசிய கோப்பை முடியும் வரை அதாவது உலககோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடரும் வரை இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட்டுகள் நடத்துவதை பிசிசிஐ தவிர்த்தது. மேலும், உள்ளூர் போட்டிகளை மற்ற மைதானங்களில் நடத்தவும் பரிந்துரைத்தது. உலகக் கோப்பை தொடருக்கு இம்முறை மொத்தம் 10 நாடுகள் களமிறங்குகின்றன.
ஐசிசி தரப்பில் உலகக் கோப்பை தொடரை கிரிக்கெட் இன்னும் பிரபலமாகாத மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களையும் இந்த தொடரில் ரசிகர்களாக இணைக்க வேண்டும் என்ற நோக்குடனும் மேலும், அந்த நாடுகளையும் கிரிக்கெட் விளையாடத் தூண்டவேண்டும் என்ற எண்ணத்துடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் அணி அணியும் ஜெர்சியை வெளியிட்டுள்ளது. ஜெர்சியின் இடது புறத்தில் உலகக்கோப்பையின் படமும் ஐசிசி ஆண்கள் உலகக்கோப்பை இந்தியா 2023 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வலது புறத்தில் பாகிஸ்தான் நாட்டுக் கொடியும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இலச்சினையும் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே ஆசிய கோப்பைக்கான தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் பெயர் பொறித்த ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது என்ற செய்தி கடந்த வாரத்தில் இணையத்தில் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அணியும் ஜெர்சியில் இந்தியா பெயர் இடம்பெற்றுள்ளது.
உலகக்கோப்பைக்கு முன்னர் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக ஆசிய கோப்பையில் விளையாடவுள்ளது. ஆசியக் கோப்பை 2023 தொடக்க ஆட்டத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முல்தானில் நேபாளத்திற்கு எதிராக பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 17 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில், செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
குறிப்பிடத்தக்க வகையில், 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பலமுறை மோத வாய்ப்புள்ளது. இரு அணிகளுக்கும் எல்லாம் சரியாக நடந்தால், ஒரே ஆசிய கோப்பை போட்டியில் மூன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனைத்தான் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்காக ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டு இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் அணி: பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா, அப்துல்லா ஷபீக், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, உசாமா மிர், ஃபஹீம் அஷ்ரப், ஹாரிஸ் ரவூப், முகமது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், முகமது வாசிம் ஜூனியர், தயப் தாஹிர் (ஸ்டாண்ட் -பை வீரர்).